உச்ச நீதிமன்றத்தில் சட்டரீதியாக வெற்றி பெற்றுள்ளோம் கர்நாடக அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

சென்னை: உச்ச நீதிமன்றத்தில் சட்டரீதியாக போராடி வெற்றி பெற்றுள்ளோம்; கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தைக்கு மீண்டும் இடமில்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: உச்ச நீதிமன்றம் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறக்க கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தண்ணீர் திறந்துவிடப்பட்டால் குறுவை சாகுபடியை காப்பாற்ற உதவும். தீர்ப்பை கர்நாடக அரசு அமல்படுத்தாவிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பிற்குள்ளாகும். எனவே, கர்நாடக அரசு அந்த நிலைக்கு போகாது என நினைக்கிறேன்.

கர்நாடகாவிற்கு சொந்தமான தண்ணீரை எங்களுக்கு தாருங்கள் என கேட்பதாக அவர்கள் நினைக்கின்றனர். ஆனால், காவிரி ஆற்றின் நீர் கர்நாடகாவிற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும் உரித்தானது. அங்கு உற்பத்தியாகி அந்த மாநிலத்தில் ஓடுவதைவிட தமிழகத்தில்தான் அதிகம் ஓடுகிறது. இந்த நீருக்கு கடைமடை பகுதியில் இருப்பவர்களுக்குதான் உரிமை உண்டு. கர்நாடக விவசாயிகளுக்கு தண்ணீர் வேண்டும் என்பதை நான் மறுக்கவில்லை. இருந்தபோதிலும், நாங்கள் மொத்த தண்ணீரையும் திறந்து விடுங்கள் எனவும் கேட்கவில்லை. எங்களுக்கான தண்ணீரை மட்டுமே கேட்கிறோம்.

அதன்படி, தீர்ப்பினை மீறி கர்நாடக அரசு செயல்படாது என நம்பிக்கை உள்ளது. ஏனெனில், ஒரு அரசை நடத்துபவர்கள் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தை தாண்டி செயல்படமாட்டார்கள். காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு பயனில்லை என தெரிந்து தான் சட்டரீதியாக மேற்கொண்டு போராடி வெற்றி பெற்றுள்ளோம். எனவே, மீண்டும் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு தற்போதைய காலத்தில் அல்ல, எந்த காலமாக இருந்தாலும், இரண்டு பக்கமும் மேளம் தான் அடிக்கும். காவிரி விவகாரத்தில் இனி அனைத்துக்கட்சி கூட்டம் என்பது தேவையில்லாத ஒன்றாகும். இவ்வாறு அவர் பேசினார்.

The post உச்ச நீதிமன்றத்தில் சட்டரீதியாக வெற்றி பெற்றுள்ளோம் கர்நாடக அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: