பீகார் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் பாட்னா உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாட்னா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில், அதில் தற்போதைக்கு தலையிட்டு எந்தவித தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.பீகார் மாநிலத்தில் ஜாதி வாரி கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. இதற்கு எதிராக பாட்னா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், பாட்னா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பீகார் அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபாய் எஸ் ஓகா மற்றும் ராஜேஷ் பிண்டால் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, ‘‘இதுதொடர்பான பிரதான வழக்கானது ஜூலை மூன்றாம் தேதி பாட்னா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதால், தற்போது இந்த விவகாரத்தில் தலையிட்டு தடை விதிக்கவோ அல்லது இடைக்காலமாக எந்த உத்தரவு பிறப்பிக்கவோ விரும்பவில்லை.

இருப்பினும், குறிப்பிட்ட தேதியில் உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றால், உச்ச நீதிமன்றத்தில் அது சார்ந்த தகவலை பீகார் அரசு தரப்பில் தெரிவிக்கலாம். அதனைத் தொடர்ந்து ஜூலை 14ம் தேதி வழக்கை பட்டியலிட்டு விசாரணை நடத்துகிறோம்,’’ என உத்தரவு பிறப்பித்தனர்.

The post பீகார் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் பாட்னா உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: