கோடை காலம் முடிந்தாலும் கொளுத்தும் வெயில் இளவரசி பூமிக்கு மக்கள் ‘படையெடுப்பு’: வார, பண்டிகை விடுமுறைக்கு குவிகின்றனர்

கொடைக்கானல்: கோடைக்காலம் முடிந்தாலும் மதுரை உட்பட தென்மாவட்டங்களில் உள்ள பல இடங்களில் வெயில் கொளுத்துவதால், வார, பண்டிகை விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகளவு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், வியாபாரிகள் உற்சாகமடைந்துள்ளது. சர்வதேச புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வார விடுமுறை தினங்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை ஆண்டு முழுவதும் இருக்கும். நடப்பாண்டிற்கான கோடை காலத்தில் கடும் வெயில் நிலவியது. அதிகபட்சமாக 106 டிகிரியையும் தாண்டி பல இடங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது. இதனால் பலரும் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட குளிர் பிரதேசங்களை நோக்கி படையெடுக்க துவங்கினர். கோடை விழா கொண்டாட்டம் ஒருபுறம், குவிந்த சுற்றுலாப்பயணிகளால் கொடைக்கானலே ஸ்தம்பித்தது. தற்போது கோடைக்காலம் முடிந்த நிலையிலும் மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. தற்போது இங்கு இதமான வெயில், சாரல் மழை என சுற்றுலாப்பயணிகள் ரசிக்கும்விதமான கிளைமேட் உள்ளது. தற்போது பள்ளி, கல்லூரிகள் இயங்கி வந்தாலும், வார விடுமுறை நாட்களில் ஒரு நாள் பயணமாக பலரும் கொடைக்கானல் வந்து செல்கின்றனர்.

இதனால் சாதாரண நாட்களிலும் கொடைக்கானல் பரபரப்பாக உள்ளது. இதனால் வியாபாரிகள், சுற்றுலா வாகன ஓட்டிகள் உற்சாகமடைந்துள்ளனர். வார விடுமுறை, மொகரம் பண்டிகையை முன்னிட்டு நேற்று காலை முதல் கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்து வந்தது. நேற்று நிலவிய ரம்மியமான சூழலை சுற்றுலாப்பயணிகள் வெகுவாக ரசித்தனர். பகலில் வெயில், இரவில் குளிர் இரண்டு மாறுபட்ட சூழல்கள் நிலவி வருவது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், கொடைக்கானலில் உள்ள மோயர் பாய்ண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, அப்பர் லேக் வியூ, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, கொடைக்கானல் ஏரி உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களிலும் மக்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். பயணிகள் வருகை மிதமான அளவில் இருந்ததால், சாலைகள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருந்தது. இதனால் கொடைக்கானல் வந்து சென்றவர்களின் பயணமும் இனிமையாக அமைந்தது

The post கோடை காலம் முடிந்தாலும் கொளுத்தும் வெயில் இளவரசி பூமிக்கு மக்கள் ‘படையெடுப்பு’: வார, பண்டிகை விடுமுறைக்கு குவிகின்றனர் appeared first on Dinakaran.

Related Stories: