×

மாணவர்கள், இளைஞர்களுக்கு போதைப்பொருள் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

*விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்கள், இளைஞர்களுக்கு போதைப்பொருள் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.விழுப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுப்பது மற்றும் போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான ஆய்வுகூட்டம் ஆட்சியர் ஷேக்அப்துல்ரஹ்மான் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அவர் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை தடுப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் கேட்டறியப்பட்டது. மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் செயல்படும் கடைகளில் தடைசெய்யப்பட்ட போதைதரக்கூடிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து விற்பனையை தடுத்திடவேண்டும்.

மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைப்பொருட்கள் பயன்படுத்துவதனால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்த வேண்டும். பொதுமக்கள் அதிகம்கூடும் இடங்களில் போதைப்பொருள் இலவசசெயலி குறித்து செயல்முறை விளக்கம் ஏற்படுத்தி இச்செயலியின் பாதுகாப்பு மற்றும் பயன்கள் குறித்த விவரம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

காவல்துறை, உணவுபாதுகாப்பு அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்களோடு தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக கூட்டாய்வு செய்திடவும், விற்பனை செய்வோர்மீது தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டதாக கூறினார்.

கூட்டத்தில் எஸ்பி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், திண்டிவனம் சப்-கலெக்டர் திவ்யாஷூநிகம், ஏஎஸ்பி ரவீந்திரகுமார்குப்தால், ஆட்சியரின் நேர்முகஉதவியாளர்(பொ) யோகஜோதி, கோட்டாட்சியர் முருகேசன் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர்.

The post மாணவர்கள், இளைஞர்களுக்கு போதைப்பொருள் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Villupuram district ,Dinakaran ,
× RELATED உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர்,...