சித்தூர், திருப்பதி மாவட்டங்களின் காவல்துறை சார்பில் நடந்த ஆயுத கண்காட்சியில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்

*பாதுகாப்பு விளக்கம் அளிக்கப்பட்டது

சித்தூர் : சித்தூர், திருப்பதி காவல்துறை சார்பில் ஆயுதபடை கண்காட்சி நேற்று நடந்தது. அதில் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று ஆயுதங்கள் செயல்படும் விதங்கள் குறித்து கேட்டறிந்தனர்.சித்தூர் போலீஸ் பயிற்சி மைதானத்தில் நேற்று காவல்துறை சார்பில் ஆயுத கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை எஸ்பி ரிஷாந்த் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து பேசியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் அமர வீரர்கள் தினத்தை முன்னிட்டு ஒரு வாரம் மாவட்டம் முழுவதும் காவல்துறை சார்பில் ஆயுத கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.அதன்படி சித்தூர் மாநகரத்தில் போலீஸ் பயிற்சி மைதானத்தில் ஆயுத கண்காட்சி இன்று (நேற்று) நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆயுத கண்காட்சி கண்டு களித்தனர்.

அதில் போலீசார் பயன்படுத்தும் ஆயுதங்கள், கை எரி குண்டுகள், அதிநவீன துப்பாக்கிகள், ஏகே 47, 306 துப்பாக்கிகள், உடல் பரிசோதனை செய்யும் ஆயுதங்கள், கண்ணிபுகை குண்டுகள் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. அதேபோல் சைபர் குற்றவாளிகளை பிடிக்கும் இயந்திரங்கள், தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கும் நபர்களை கண்டறியும் இயந்திரங்கள் உள்ளிட்டவை இந்த ஆயுத கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

இக்கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குற்றங்கள், சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு காவல்துறை சார்பில் ஏற்படுத்தினர். அது மட்டுமல்லாமல் அமர வீரர்கள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஒரு வாரமாக பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றுகளும் வழங்கப்பட்டது. இதில் முதல் பரிசாக ₹5 ஆயிரமும், 2ம்பரிசாக ₹3 ஆயிரம், 3வது பரிசாக ₹2ஆயிரம் வழங்கப்பட்டது. கண்காட்சிக்கு வரும் மாணவர்களுக்கு காவல்துறையினர் எவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொது மக்கள், மாவட்ட இணை எஸ்பி சுதாகர், நகர டிஎஸ்பி சீனிவாச மூர்த்தி உள்பட ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருப்பதி காவல்துறை பயிற்சி மைதானத்தில் நடந்த காவல்துறை ஆயுத கண்காட்சியை எஸ்பி பரமேஸ்வர் தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த பல்வேறு கல்லூரி, பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் எஸ்பி கலந்துரையாடி ஆயுதங்கள் மற்றும் காவல் துறை உபகரணங்கள் குறித்து விளக்கி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, போலீசார் பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் அவற்றை பயன்படுத்தும் முறைகள் குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். மேலும் இதில் போலீசார் வாகனங்கள், புல்லட் ப்ரூப் வாகனம், தகவல் தொடர்பு வாகனம், 207 வஜ்ரா வாகனம்.

மெட்டல் டிடெக்டர், டிராகன் லைட், ராக்கர், வெடிகுண்டு செயலிழக்கும் கருவிகள், கைரேகை, தகவல் தொடர்பு மேன் பேக் செட்டுகள், குற்றப்புலனாய்வுப் பணியில் பயன்படுத்தப்படும் நாய் படைக்குழுக்கள், செல் ஜாமர் உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் உட்பட காவல் துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

The post சித்தூர், திருப்பதி மாவட்டங்களின் காவல்துறை சார்பில் நடந்த ஆயுத கண்காட்சியில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: