‘ஸ்டிக்கர் பாய்ஸ்’ என்ற பெயருக்கு சொந்தக்காரர்கள் அதிமுகவினர்: அமைச்சர் ரகுபதி பதிலடி

நாகப்பட்டினம்: ‘ஸ்டிக்கர் பாய்ஸ்’ என்று பெயர் பெற்றவர்கள் அதிமுகவினர் என்று அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். நாகப்பட்டினம் அரசு தொழிற்பயிற்சி வளாகத்தில் 3வது புத்தக திருவிழா தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. புத்தக திருவிழாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னையில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக அரசை பார்த்து ஸ்டிக்கர் ஒட்டி திட்டங்களை அறிமுகப்படுத்துகிறார் என்று விமர்சித்துள்ளார்.

‘ஸ்டிக்கர் பாய்ஸ்’ என்று பெயர் பெற்றவர்கள் அதிமுகவினர். வறட்சி காலங்களில் நிவாரணம் வழங்கும் போதும் மற்ற எந்த நலத்திட்டங்கள் என்றாலும் அதிமுகவினர்தான், ஸ்டிக்கரை ஒட்டி விநியோகித்து அந்த பெயரை பெற்றனர். அம்மா மருந்தகத்தை முதல்வர் மருந்தகம் என தமிழக முதல்வர் பெயர் மாற்றி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அம்மா மருந்தகம், வேறு முதல்வர் மருந்தகம் வேறு. அம்மா மருந்தகம் கூட்டுறவு துறையோடு இயங்கியது. மாநிலம் முழுவதும் அம்மா மருந்தகம் 380 தான் இருந்தது.

ஆனால் முதல்வர் மருந்தகம் மாநிலம் முழுவதும் 1000 திறக்கப்பட்டுள்ளது. டி.பார்ம், பி.பார்ம் படித்த மாணவர்கள் ரூ.3 லட்சம் வரை மானியத்துடன் இதில் தொழில் தொடங்க முடியும். வங்கியில் கடன் பெற முடியும். முதல்வர் மருந்தகம் மூலம் அனைத்து வகையான பொது மருந்துகளும் கிடைப்பதுடன், வேலையில்ல திண்டாட்டமும் குறையும். அதேபோல அம்மா சிமெண்ட் திட்டத்தை வலிமை சிமெண்ட் திட்டமாக மாற்றி உள்ளதாக ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். ஆனால் அம்மா சிமெண்ட் எடப்பாடி ஆட்சிக்காலத்திலேயே கைவிடப்பட்டது.

ஏழை, மக்களுக்கு பயன்பெறும் வகையில் வலிமை சிமெண்ட் திட்டத்தை முதல்வர் கொண்டுவந்துள்ளார். எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க தயார் என அதிமுக பேசியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சில தொகுதிகளில் அதிமுக 3,4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. விக்கிரவாண்டி தேர்தலை பார்த்து பயந்தவர்கள் அதிமுகவினர். அதிமுகவில் உள்ளவர்கள் கட்சியை விட்டு வெளியே செல்வதை தவிர்க்கவே ஜெயக்குமார் இது மாதிரி பேசி வருகிறார். திமுக எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது. ஆளுநரை தன் பக்கம் வைத்துக்கொள்ள தேநீர் விருந்தில் கலந்து கொண்டதாக அதிமுக குற்றம் சாட்டுகின்றனர்.

திமுகவினருக்கு ஒருபோதும் பாஜவின் துணை தேவையில்லை. அதிமுகவுக்கு, பாஜ வேண்டுமானால் எஜமானவர்களாக இருக்கலாம். ஆனால் திமுகவினருக்கு பாஜ எஜமானர் இல்லை. இந்தியாவிலேயே பாஜவை எதிர்ப்பதில் முன்னோடியாக இருந்தவர் தமிழக முதல்வர் மட்டும்தான். ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்க மறுத்த போது தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்ததால் ஒரு சில அமைச்சர்களுடன் முதல்வர் பங்குபெற்றார். அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் ஆளுநர் தான் ஒப்புதல் தர வேண்டும். எனவே ஒரு போதும் பாஜவை பார்த்து திமுக அச்சம் அடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

* அதிமுகவுக்கு, பாஜ வேண்டுமானால் எஜமானவர்களாக இருக்கலாம். ஆனால் திமுகவினருக்கு பாஜ எஜமானர் இல்லை. இந்தியாவிலேயே பாஜவை எதிர்ப்பதில் முன்னோடியாக இருந்தவர் தமிழக முதல்வர் மட்டும்தான்.

The post ‘ஸ்டிக்கர் பாய்ஸ்’ என்ற பெயருக்கு சொந்தக்காரர்கள் அதிமுகவினர்: அமைச்சர் ரகுபதி பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: