இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் பாம்பன் மீனவர்கள் 35 பேர் சிறைபிடிப்பு: 4 நாட்டுப்படகுகளும் பறிமுதல்

ராமேஸ்வரம்: கடலுக்குச் சென்ற பாம்பன் மீனவர்கள் 35 பேரையும், 4 நாட்டுப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்த சம்பவம், மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமேஸ்வரம் அருகே பாம்பன் வடக்கு கடற்கரையில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெரிய நாட்டுப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். நேற்று பிற்பகல் ஐந்துக்கும் மேற்பட்ட ரோந்துப் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், மீன் பிடித்துக் கொண்டிருந்த நாட்டுப்படகு மீனவர்களை விரட்டியடித்து சிறைபிடித்தனர்.

இதில் பாம்பன் பகுதியை சேர்ந்த 35 மீனவர்களையும், 4 நாட்டுப்படகுகளையும் இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர் மீனவர்களை இலங்கை கடற்படையினர், கற்பிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு விசாரணை நடத்தி மேல் நடவடிக்கைக்காக மீன்வளத்துறையிடம் ஒப்படைத்தனர். நாட்டுப்படகு மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் ராமேஸ்வரம் தீவு மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 31ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் விசைப்படகு மீது, இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் மீனவர் மலைச்சாமி உயிரிழந்தார். உடன் சென்ற மீனவர்கள் மூக்கையா, முத்து முனியாண்டி இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டு ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர். ஆனால் கடலில் மாயமான மீனவர் ராமச்சந்திரனை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது 35 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்த சம்பவம் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மீனவரை தாக்கி உபகரணங்கள் பறிப்பு
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை வடக்குத்தெருவை சேர்ந்த விமலா என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் (48), சாணக்கியன்(32), அமுதகுமார்(58), பாக்கியராஜ்(40), தேத்தாகுடி தெற்கு தெருவை சேர்ந்த நாகராஜ்(60) ஆகியோர் ஆறுக்காட்டுத்துறை கடற்கரையில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு ஆறுகாட்டுத்துறைக்கு கிழக்கே 20 நாட்டிகல் மைல் தொலைவில் நடுக்கடலில் வலையை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ஒரு பைபர் படகில் தமிழ் பேச தெரிந்த இலங்கையை சேர்ந்த 5 பேர் வந்தனர். திடீரென அவர்களில் 3 பேர், ஆயுதங்களுடன் ஆறுக்காட்டுத்துறையை சேர்ந்த மீனவர்களின் படகில் ஏறினர். பின்னர் மீனவர்கள் விரித்து வைத்திருந்த வலையை எடுக்க கூறி அன்பழகனை மூங்கில் தடியால் தாக்கினர்.

தொடர்ந்து மீனவர்களின் படகில் இருந்த 400 கிலோ மீன்கள், வலை, திசைகாட்டும் கருவி, ஒரு பேட்டரி, டார்ச் லைட், ஸ்டவ் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து நள்ளிரவு ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு திரும்பிய 5 மீனவர்களும், கிராம பஞ்சாயத்தாரிடம் நடந்த சம்பவத்தை கூறினர். கடல் கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த அன்பழகனை சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தலையில் 3 தையல் போடப்பட்டுள்ளது.

The post இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் பாம்பன் மீனவர்கள் 35 பேர் சிறைபிடிப்பு: 4 நாட்டுப்படகுகளும் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: