சிங்கப்பூர் ஏற்றுமதியாகும் தர்மபுரி கோவக்காய்

சாகுபடியில் அசத்தும் பெண் விவசாயி ஆண்டுக்கு ₹2 லட்சம் வருவாய்

பிம்பி என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கோவைக்காய், ஆசியா மற்றும் ஆப்ரிக்காவை தாயகமாக கொண்டது. காக்கினியா இண்டிகா என்பது இதன் தாவரப் பெயராகும். கோவைக்காயானது விம்பம், தொண்மை, கொவ்வை என்று தமிழில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. கிராமத்து மக்கள், கோவக்காய் என்றே உச்சரிக்கின்றனர். கோவக்காய் பச்சையாகவும், பழங்கள் சிவப்பாகவும் காட்சியளிக்கிறது. கோவைப்பழத்தின் சிவப்பு என்பது சிறப்பு நிறமாகவும் வர்ணிக்கப்படுகிறது. இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட கோவைக்காய், மருத்துவ குணங்கள் மிகுந்தது என்பதையும் பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்துள்ளது.கோவக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை பெற முடியும். சொரியாசிஸ், சிரங்கு, தேமல், பொடுகு, தொப்பை, சர்க்கரை நோய், சிறுநீரக பிரச்னைகள் ஆகியவற்றிற்கு தீர்வாக அமைகிறது. மேலும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டாகவும் செயல்படுகிறது. மருத்துவ குணங்கள் கொண்ட கோவைக் காய் மேட்டுபாசனத்தில் தான் நன்றாக வளர்கிறது. தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வணிகரீதியாக அதிகளவில் கோவைக்காய் சாகுபடி நடக்கிறது. இதரமாவட்டங்களில் பெயரளவுக்கு சாகுபடி செய்யப்படுகிறது.

இந்நிலையில் தர்மபுரி அருகே புலிகரை கிராமத்தில் உள்ள பெண் விவசாயி வேடியம்மாள் முதல் முறையாக கோவைக்காயை தனது நிலத்தில் பயிரிட்டு கவனம் ஈர்த்து வருகிறார். இயற்கை உரங்களிட்டே அவர் சாகுபடி செய்யும் ேகாவைக்காய்க்கு நல்லவரவேற்பு உள்ளது. இதுபற்றி பெண் விவசாயி வேடியம்மாள் கூறியதாவது:“எங்களுக்கு சொந்தமாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் சீசனுக்கு ஏற்றாற்போல் பல பயிர்கள் பயிரிட்டு வந்தோம். இந்நிலையில் உறவினர் ஒருவரின் ஆலோசனையின் பேரில், கோவைக்காய் பயிரிடலாம் என முடிவு செய்தோம். கடந்த 2021ம் ஆண்டு தேனி மாவட்டத்தில் உள்ள நர்சரி பண்ணையில் இருந்து ஒரு நாற்று ₹40 என்ற விலையில் 500 நாற்றுகள் வாங்கி வந்து நடவு செய்தோம். அதனை சுற்றிலும் கற்கள் மூலம் கல்பந்தல் போட்டுள்ளோம். இதனால் பெரும் காற்று வீசும்ேபாது பந்தல் சாய்ந்துவிடாமல் பாதுகாக்கப்படும். நாற்று நட்ட 60 நாளில் காய்கள் பிடிக்க துவங்கியது. அதன் பின்னர் 6 மாதத்தில் நல்ல மகசூல் கிடைக்க துவங்கியது.

கோவைக்காய்க்கு செயற்கை உரம் எதுவும் போடுவதில்லை. எங்கள் தோட்டத்தில் நாங்கள் மாடு வளர்ப்பதால் பஞ்சகவ்யம், சாணஎரு, தொழு உரம் ஆகியவற்றை நாங்களே தயாரித்துக்கொள்கிறோம். மேலும் அவ்வப்போது மீன் அமிலம் தெளிக்கிறோம். பூச்சி தாக்குதல் அதிகமாக இருந்தால் மட்டும் ரசாயன பூச்சி கொல்லி தெளித்துள்ளோம். கடந்த 2 ஆண்டுகளாக 5 நாட்களுக்கு ஒரு முறை காய்கள் பறிக்கிறோம். காய் பறிக்கவும், உரம் இடுவதற்கும் 3 பெண் விவசாயிகள் வேலை செய்கின்றனர். ஒவ்வொரு பறிப்பின் போதும் 250 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. இவற்றில் முதல் தர காய்களை பிரித்து சென்னையில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கிறோம்.

அங்கிருந்து சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இரண்டாம் தரமான காய்கள் ராயக்கோட்டை மார்க்கெட் மூலம், சென்னை, கோயமுத்தூர், பெங்களூருக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம். ஒரு கிலோ குறைந்தபட்சமாக ₹10க்கும் அதிகபட்சமாக ₹25க்கும் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். பனிக்காலமான நவம்பர், டிசம்பர், ஜனவரியில் மட்டும் காய்பிடிப்பதில்லை. மற்ற 9 மாதங்களும் காய்கள் ஒரு மாதத்திற்கு ஒரு டன் முதல் 1.5 டன் வரை மகசூல் கிடைக்கிறது.

வருமானமும் ₹2 லட்சம் வரை கிடைக்கிறது. பராமரிப்பு கூலி என ₹1.5 லட்சம் செலவாகிறது. இதுதவிர கோவைக்காய் இங்கு கிடைப்பதை அறிந்த தர்மபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு பகுதிகளை சேர்ந்த உள்ளூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் நேரடியாக எங்கள் தோட்டத்திற்கே வந்து கோவைக்காயை வாங்கி செல்கின்றனர். இந்த பகுதியில் யாரும் பயிரிடாத கோவைக்காயை பயிரிட்டுள்ளதன் மூலம் நல்ல வருவாய் ஈட்டி வருகின்றனர். ஆர்வமுள்ள விவசாயிகள் அனைவருக்கும் ஆலோசனைகள் வழங்க காத்திருக்கிறோம்.

தொடர்புக்கு:

வேடியம்மாள் : 90956-60991

இனப்பெருக்கம்

இளந்தண்டிலிருந்து பெறப்பட்ட வெட்டுக்குச்சிகள் மூலம் பொதுவாக இனப்பெருக்கம் செய்யலாம்.நன்கு வளர்ந்த தண்டில் பருமனான பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட 20லிருந்து 30 செ.மீ. நீளமும் 1-2 செ.மீ. பருமனும் உள்ள வெட்டுக்குச்சிகளை மேட்டுப் பாத்திகளில் 25 செ.மீ. து 15 செ.மீ. அளவுள்ள பாலிதீன் பைகளில் 1:1:1 என்ற விகிதத்தில் மணி, மணல், மக்கிய தொழு உரம் கலந்து நிரப்பி நடவேண்டும். தினமும் நீர் ஊற்றி பராமரித்தால் 35-40 நாளில் நன்கு வேர் பிடித்துவிடும்.

கவாத்து செய்வது அவசியம்

கோவைக்காய் கொடியை தரையிலிருந்து 1.5-1.75மீ உயரத்தில் பந்தலில் படரவிட வேண்டும்.ஆரம்ப காலங்களில் தரை மட்டத்திலிருந்து பந்தல் உயரம் வரை சணல் அல்லது மெல்லிய பிளாஸ்டிக் கயிறு கட்டிவிட்டாலும் பந்தலில் எளிதாக படர்ந்து வளரும்.அதிகப்படியாக வளரும் கிளைகளை வெட்டிவிட வேண்டும்.ஒரு ஆண்டு வளர்ச்சி அடைந்ததும் குளிர்காலத்தில் பந்தலை ஒட்டி 1.5 மீட்டர் உயரத்திற்கு நன்கு வளர்ந்த தண்டுகளை வெட்டி கவாத்து செய்ய வேண்டும்.பின்னர் உரம் வைத்து நீர் பாய்ச்சினால் நன்கு தழைத்து வளரும்.செடி நட்ட 50-60 நாட்களில் காய்கறி அறுவடைக்கு வரும். நல்ல பச்சைநிற காய்களை 2 நாட்களுக்கு ஒரு முறை பறிக்கலாம்.வருடத்திற்கு ஒரு செடியிலிருந்து 30-40 கிலோ காய்கள் பெறலாம்.

நடவுநன்கு வேர் பிடித்த வெட்டுக்குச்சிகளை எடுத்து நடவுக்குப் பயன்படுத்த வேண்டும்.2.5 மீட்டர் இடைவெளியில் 2 அடி நீள, அகல, ஆழமுள்ள குழிகளை எடுத்து 15 நாட்கள் சூரிய ஒளி படும்படி வைத்திருக்க வேண்டும்.பின்னர் குழி ஒன்றுக்கு மேல் மண், லீ-1 கிலோ மக்கிய தொழு உரம், லீ கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து குழிகளை நிரப்பி நடவேண்டும்.கோடைப்பருவம் நீங்கலாக ஆண்டு முழுவதும் கோவைச்செடி நடவு செய்யலாம். எனினும் ஜூன், ஜூலை நடவுக்கு ஏற்ற பருவமாகும்.

ரகங்கள்

வணிக ரீதியாக பிரபலமான ரகங்கள் இல்லை. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் ஆணைக்கட்டி என்ற இடத்திலுள்ள கோவைக் கொடியிலிருந்து மரபுவழி தேர்வு செய்யப்பட்ட ஒரு வளர்ப்பு ஆராய்ச்சியில் உள்ளது.இதன் காய் நீண்ட பச்சை நிறத்தில், வெண்மை நிறக் கோடுகளைக் கொண்டதாக சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 65-70 டன் காய்களை விளைச்சலாக தரவல்லது. கோவைக்காய் பயிர் ஓரளவு வெப்பம் தாங்கி வளரக்கூடியது. நல்ல வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான மண்ணில் நன்கு வளரும். களர் உப்பு நிறைந்த மண்ணில் நன்கு வளர்ந்து விளைச்சலைத் தரக்கூடியது.

The post சிங்கப்பூர் ஏற்றுமதியாகும் தர்மபுரி கோவக்காய் appeared first on Dinakaran.

Related Stories: