பாலியல் புகாரில் சிக்கியவருக்கு மீண்டும் மாவட்ட தலைவர் பதவி பாஜ தலைமை அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் தர்ணா: சென்னையில் திடீர் பரபரப்பு

சென்னை: பாலியல் புகார் அளிக்கப்பட்டவருக்கு மீண்டும் மாவட்ட தலைவர் பதவி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண் தனது ஆதரவாளர்களுடன் நேற்று பாஜ தலைமை அலுவலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பாஜ மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒரு பெண்ணிடம் ஸ்பா லைசென்ஸ் பெற்று தருவதாக கூறி ரூ.20 லட்சம் பெற்றுக்கொண்டு அந்த பெண்ணை மிரட்டியதோடு, அந்த பெண்ணின் ஸ்பாவிற்கு சென்று அங்குள்ள பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக புகார் எழுந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 29ம் தேதி சமூக வலைத்தளங்களில் ஆடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன குரல்கள் எழுந்தன. இதை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தை சார்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் வி.சரவணன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் சோமு.ராஜசேகர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் பி.செந்தில்குமார், மாவட்ட பொது செயலாளர் பி.பொன்பாஸ்கர், மாவட்ட பொது செயலாளர் கே.எம்.ஆர்.முத்துராஜ் ஆகிய 5 பேர் நீக்கப்பட்டனர்.

கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை செய்து முழுமையாக அறிக்கை அளிக்கும் வரை கட்சியின் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தார். இந்நிலையில் செந்தில்குமார் அளித்த விளக்கத்தை தொடர்ந்து, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவராக செந்தில்குமார் தொடர்ந்து பணியாற்றுவார் என்று அண்ணாமலை கடந்த 18ம் தேதி அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

பாலியல் புகார் அளிக்கப்பட்ட செந்தில்குமாருக்கு மீண்டும் மாவட்ட தலைவர் பதவி வழங்கப்பட்டதை கண்டித்து, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனது ஆதரவாளர்களுடன் நேற்று சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு வந்தார். அங்கு திடீரென அந்த பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், பாஜ அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பாஜ அலுவலகத்தில் இருந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பெண் ஒருவர் திடீரென பாஜ அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பாலியல் புகாரில் சிக்கியவருக்கு மீண்டும் மாவட்ட தலைவர் பதவி பாஜ தலைமை அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் தர்ணா: சென்னையில் திடீர் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: