சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக இன்று தனித்தீர்மானம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வருகிறார்

சென்னை: ‘‘தமிழக அரசுடன் மோதல் போக்கை தொடரும் ஆளுநருக்கு குடியரசுத் தலைவர் அறிவுரை வழங்க வேண்டும்’’ என வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் தனித்தீர்மானம் கொண்டு வருகிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்து, தமிழக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கையாண்டு வருகிறார். ஆளுநர் மாளிகையில் வேண்டும் என்றே சில விழாக்களை நடத்தி, அதில் ஆர்.எஸ்.எஸ்., பாஜவினுடைய கருத்துகளை திணிக்க முயற்சித்து வருகிறார். இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் உடனடியாக எதிர்ப்பை கண்டனமாக தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ‘தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று அழைக்கலாம்’ என கூறினார். பின்னர், ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா அழைப்பிதழில், தமிழக ஆளுநர் என்று குறிப்பிட்டு, தமிழ்நாடு அரசின் இலச்சினைக்கு பதிலாக ஒன்றிய அரசின் இலச்சினையை இடம்பெற செய்தார். இதற்கும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித்தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல், அதில் உள்ள சந்தேகங்களை எழுப்பியும், பின்னர் 5 மாதங்களுக்கு பிறகு தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார்.

இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆளுநர் மாளிகையில் யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களிடையே பேசும்போது, ‘ஒரு சட்ட மசோதா நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்தால் மசோதா காலாவதியானதாகவே பொருள். நிலுவையில் வைப்பது என்பது நிராகரிக்கப்பட்டத்தை கண்ணியமாக குறிப்பிடுவதாகவே அர்த்தம். அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு கட்டாயம் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை’’ என பேசி இருந்தார்.

இந்த கருத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை, ஆளுநர் கொச்சைப்படுத்துகிறார் என கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் அதிமுக உட்பட அனைத்து அரசியல் கட்சியினரும் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களிலும் ஆளுநருக்கு எதிரான கருத்துகளை மக்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்த பரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டபேரவை இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும், கேள்வி நேரம் முடிந்ததும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சொன்ன கருத்துக்கு தமிழக சட்டப்பேரவையில் ஒரு தனித்தீர்மானம் கொண்டு வர முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அந்த தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:

‘‘தமிழ்நாட்டு மக்களின் பேராதரவைப் பெற்று, ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ள அரசுக்கு, தமது தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய அரசமைப்புச் சட்டத்தின்படியான பொறுப்பும், ஜனநாயகரீதியான கடமையும் உள்ளது. இவற்றைக் கருத்தில்கொண்டு, இந்தச் சட்டமன்றப் பேரவைக்கு உள்ள இறையாண்மை மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படியான சட்டமியற்றும் பொறுப்புகளின் அடிப்படையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள பல்வேறு மசோதாக்களை, தமிழ்நாடு ஆளுநர் அனுமதி அளிக்காமல், காலவரையின்றி கிடப்பில் போட்டு, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதை இப்பேரவை மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்கிறது.

அதுமட்டுமின்றி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் குறித்து பொதுவெளியில் ஆளுநர் தெரிவிக்கும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள், அவர் வகிக்கும் பதவி, எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணம் ஆகியவற்றுக்கும், மாநிலத்தின் நிர்வாக நலனுக்கும் ஏற்புடையதாக இல்லை என்பதோடு, அரசமைப்புச் சட்டத்திற்கும், கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகளுக்கும் எதிராகவும், இப்பேரவையின் மாண்பைக் குறைத்து, பாராளுமன்ற ஜனநாயகத்தில் சட்டமன்றத்தின் மேலாண்மையை சிறுமைப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

எனவே, மாநில மக்களின் குரலாக விளங்கும் சட்டமன்றங்களில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அந்தந்த மாநில ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியுறுத்துவது என்றும், மக்களாட்சி தத்துவம் மற்றும் மாட்சிமை பொருந்திய ஆகியவற்றிற்குக் களங்கம் இச்சட்டமன்றத்தின் இறையாண்மை விளைவிக்கும் வகையில் தொடர்ந்து தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதைத் தவிர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சட்டமியற்றும் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில் இப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் அளித்திட வேண்டும் என ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்படும் ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பார். தமிழ்நாடு சட்டபேரவையில் ஆளுநருக்கு எதிராக மீண்டும் தீர்மானம் கொண்டு வரப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் உரையின் போது தமிழக அரசு கொடுத்த உரையை படிக்காமல் சில கருத்துகளை படிக்காமலும், தாமாக சில கருத்துகளை சேர்த்து படித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் தேசிய கீதம் இசைக்கும் முன்பே ஆளுநர் அவையை விட்டு வெளியேறினார். இதை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு ஆளுநர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கி விட்டு தமிழக அரசு அச்சிட்ட ஆளுநர் உரையே ஏற்றுக்கொள்ளபடும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக ஆளுநர் மீது தொடர்ந்து சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.

The post சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக இன்று தனித்தீர்மானம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வருகிறார் appeared first on Dinakaran.

Related Stories: