வங்கியில் உரிமை கோராத ரூ.35,000 கோடி டெபாசிட்: உரியவர்களுக்கு தர நடவடிக்கை

புதுடெல்லி: ‘வங்கிகளில் உரிமை கோரப்படாத ரூ.35 ஆயிரம் கோடி டெபாசிட் பணத்தை உரியவர்களுக்கு வழங்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நிதித்துறை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒரு வங்கிக் கணக்கில் இருந்து 10 ஆண்டு அல்லது அதற்கு மேலாக பணம் எடுக்கப்படாமல் இருந்தால், அது உரிமை கோரப்படாத டெபாசிட் என வகைப்படுத்தப்படும். அந்த வகையில், கடந்த பிப்ரவரி மாதம், பொதுத்துறை வங்கிகளில் இருந்து உரிமை கோரப்படாத ரூ.35,000 கோடி பணம் ரிசர்வ் வங்கிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான உயர்மட்ட அமைப்பான நிதி ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சிலின் (எப்எஸ்டிசி) 27வது கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.

இதில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்த பொருளாதார விவகார செயலாளர் அஜய் சேத், ‘‘அமெரிக்க வங்கிகள் திவாலால், இந்திய நிதி அமைப்பில் எந்த பாதிப்பும் இல்லை. இந்திய வங்கிகள் நன்றாக பாதுகாக்கப்பட்டுள்ளன. வங்கிகளில் உரிமை கோரப்படாத டெபாசிட்களை உரியவர்கள் மற்றும் அவர்களின் தகுதிவாய்ந்த குடும்பத்தினர் பெறுவதை உறுதி செய்ய சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென எப்எஸ்டிசி வலியுறுத்தி உள்ளது’’ என்றார். இதுதொடர்பாக 4 மாதத்தில் தனி இணையதளம் தொடங்கப்படும் என்றும் அதில் உரிமை கோராத டெபாசிட் விவரங்களை பெறலாம் என கடந்த மாதம் ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

The post வங்கியில் உரிமை கோராத ரூ.35,000 கோடி டெபாசிட்: உரியவர்களுக்கு தர நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: