அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.12.50 லட்சம் மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா: போலீசார் விசாரணை

பூந்தமல்லி: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடி செய்தது தொடர்பாக, போலீசார் விசாரிக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார்(32). இவருக்கு அறிமுகமான மதுரவாயலை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர், அரசுத்துறையில் உயர் அதிகாரிகள் பலருடன் தனக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், பணம் கொடுத்தால் அரசு வேலை எளிதாக வாங்கிவிடலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய சந்தோஷ்குமார் அரசு வேலைக்காக ரூ.12.50 லட்சத்தை தமிழ்ச்செல்வன் கூட்டாளியான சலீம் என்பவரது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.

ஆனால் பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி, விசாரித்தபோது, தமிழ்ச்செல்வன் தனது கூட்டாளிகளான பத்மாவதி, சலீம் ஆகியோருடன் சேர்ந்து பணம் வாங்கி கொண்டு ஏமாற்றியது தெரியவந்தது. இந்நிலையில் அவர்கள் தலைமறைவானதாகவும் தற்போது அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து அவர்கள் வீட்டிற்கு சென்று கேட்டபோது, காவல் துறையை சார்ந்த அதிகாரிகள் மிரட்டல் விடுப்பதாகவும் சந்தோஷ்குமார் மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார்.

அதில், தங்களிடம் பணத்தை வாங்கி ஏமாற்றிய நபர்கள் போலீஸ் அதிகாரிகளை வைத்து மிரட்டல் விடுப்பதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் எனவும், பணத்தை கேட்க சென்ற தங்களுக்கு மிரட்டல் விடுத்த போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பணத்தை வாங்கி ஏமாற்றிய நபரின் வீடு மதுரவாயல் காவல் நிலையம் அருகில் இருக்கும் நிலையில், சந்தோஷ்குமார் குடும்பத்துடன் சென்று அவரது வீட்டின் முன்பு திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த மதுரவாயல் போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, அங்கிருந்து, அவர்களை அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.12.50 லட்சம் மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: