குவாலிபயர் 1 போட்டியில் இன்று மோதல்; சேப்பாக்கத்தில் `மல்லுக்கட்டும்’ சென்னை-குஜராத்: முதல் அணியாக பைனலுக்கு தகுதி பெற முனைப்பு

சென்னை: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் லீக் போட்டிகள் முடிந்துள்ளன. லீக் சுற்றின் முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் 20 புள்ளிகளுடன் முதலிடத்தையும் சென்னை சூப்பர் கிங்ஸ் 17 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்தன. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்று போட்டிகள் இன்று தொடங்குகிறது. சேப்பாக்கத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் குவாலிபயர் 1 ஆட்டத்தில் சென்னை, குஜராத் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோற்கும் அணி குவாலிபயர்-2 ஆட்டத்தில் விளையாடும். நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி குவாலிபயர்-2 போட்டியில் விளையாடும். தோற்கும் அணி வெளியேற்றப்படும்.

இதுவரை இந்த இரு அணிகள் நேருக்கு நேர் மோதியுள்ள 3 போட்டிகளில், அனைத்திலும் குஜராத் அணியே வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் குவாலிபயர் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளதால், சென்னை அணி ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் கடைசி லீக் போட்டியில் கூட முக்கிய வீரர்களுக்குகூட ரெஸ்ட் கொடுக்காமல் ஹர்திக் பாண்டியா குஜராத் அணியை களமிறக்கினார். இதன் மூலமாகவே குஜராத் எந்தவிதமான ஆட்டத்தை ஆடும் என்று தெரிந்து கொள்ளலாம். அதோடு சென்னை அணிக்காக நீண்ட காலம் ஆடிய மோகித் சர்மா, பயிற்சியாளர் நெஹ்ரா, சேப்பாக்கம் மைதானத்தில் தமிழ்நாடு அணிக்காக ஆடி வரும் சாய் கிஷோர், சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கர் ஆகியோரும் குஜராத் அணியில் உள்ளனர்.

இதனால் சேப்பாக்கம் பிட்சில் ஏற்படப்போகும் மாற்றங்களை குஜராத் அணி நிச்சயமாக அறிந்து வைத்திருக்கும். ஆனால் குஜராத் அணியின் வெற்றியில் சுப்மன் கில், முகமது ஷமி மற்றும் ஹர்திக் பாண்டியா, விஜய்சங்கர் ஆகியோர் மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளனர். அவர்களை சிஎஸ்கே வீரர்கள் கடந்த காலங்களில் சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளனர். நடப்பு சீசனில் பவர் பிளே ஓவர்களில் மட்டும் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஷமி பந்துவீச்சில் ரஹானே ஆட்டமிழந்ததே இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

அதேபோல் கடந்த 3 போட்டிகளாக பவர் பிளே ஓவர்களில் சென்னை அணிக்காக சிறப்பாக பந்துவீசி வரும் தீபக் சாஹர், குஜராத் அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில்லை இரு முறை வீழ்த்தி அசத்தியுள்ளார். தீபக் சாஹர் பந்துவீச்சில் கில் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஜடேஜாவின் சுழலில் ஏராளமான முறை சிக்கி அவுட்டாகியுள்ளார். இதனால் குஜராத் அணியின் முதுகெழும்பாக உள்ள வீரர்களை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் சேப்பாக்கம் மைதானத்தின் தன்மையை பற்றி நன்கு அறிந்த ஏராளமான வீரர்கள் குஜராத் அணியில் உள்ளனர். ஏற்கனவே தமிழ்நாடு அணிக்காக சிறப்பாக ஆடி வரும் விஜய் சங்கர் குஜராத் அணிக்காகவும் மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். அதேபோல் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சாய் சுதர்சன் எதிரணிக்கு ஒரு காட்டு காட்டிவிடுவார். அதுமட்டுமல்லாமல் சென்னை அணிக்காக நீண்ட ஆண்டுகள் விளையாடிய மோகித் சர்மாவை குஜராத் அணி வேறு மாதிரி டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாக மாற்றிக் காட்டியுள்ளது. அதேபோல் சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றிபெற வேண்டுமென்றால் தரமான 3 ஸ்பின்னர்கள் தேவை. ஏற்கனவே ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் 3 ஸ்பின்னர்களுடன் வந்ததால் தான் சென்னை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த முடிந்தது.

இதனால் இன்றைய போட்டியில் ரஷித்கான் மற்றும் நூர் அஹ்மத் ஆகியோருடன் சாய் கிஷோர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சென்னை அணியுடன் நீண்ட ஆண்டுகள் பயணித்துள்ள சாய் கிஷோர், சேப்பாக்கம் மைதானத்தில் தான் கிரிக்கெட்டையே தொடங்கினார். இதனால் குஜராத் அணியின் வெற்றிக்கு சாய் கிஷோர் முக்கிய துருப்புச்சீட்டாக இருப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. கடந்த சீசனிலும் குஜராத் அணி அவரை முக்கியப் போட்டிகளில் களமிறக்கி ஆச்சரியம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

எனவே குஜராத் அணியை வீழ்த்த சிஎஸ்கே வீரர்கள் முழு திறமையை பயன்படுத்த வேண்டும். சி.எஸ்.கே. அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் திகழ்கிறது. தொடக்க ஜோடி பேட்டிங்கில் முக்கிய பங்கு வகிக்கிறது. கான்வே 6 அரை சதத்துடன் 585 ரன் எடுத்து 5-வது இடத்தில் இருக்கிறார். மற்றொரு தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 3 அரை சதத்துடன் 504 ரன்கள் எடுத்து உள்ளார். இதுதவிர ஷிவம் துபே (385 ரன்), ரகானே, கேப்டன் டோனி போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் அணியில் உள்ளனர். மொயின் அலி, அம்பத்தி ராயுடு ஆகியோர் தங்களது ஆட்டத்தை மேம்படுத்துவது அவசியமாகும். பந்துவீச்சில் துஷார் தேஷ் பாண்டே (20 விக்கெட்), ஜடேஜா (17), பதிரனா (15) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

சொந்த மண்ணில் விளையாடுவது சி.எஸ்.கே. அணிக்கு கூடுதல் பலமாகும். இதை வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி தொடர்ந்து 2-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. குஜராத் அணியில் சுப்மன் கில் (680 ரன்), கேப்டன் ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், விருத்திமான் சாகா, மில்லர், ராகுல்திவாட்டியா போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் முகமது ஷமி, ரஷீத் கான் (தலா 23 விக்கெட்), மோகித் சர்மா (17 விக்கெட்), போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

சேப்பாக்கத்தில் நடைபெறும் ஒவ்வொரு போட்டியிலும் ரசிகர்கள் திரண்டுவந்து சி.எஸ்.கே. வீரர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள். இன்றைய போட்டியிலும் ரசிகர்களின் உற்சாகத்துக்கு பஞ்சம் இருக்காது. பலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் இந்த போட்டியில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெறுவது யார்? என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

The post குவாலிபயர் 1 போட்டியில் இன்று மோதல்; சேப்பாக்கத்தில் `மல்லுக்கட்டும்’ சென்னை-குஜராத்: முதல் அணியாக பைனலுக்கு தகுதி பெற முனைப்பு appeared first on Dinakaran.

Related Stories: