இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரி ரூ.375 கோடி வசூல்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் 2ம் அரையாண்டுக்கான சொத்து வரியாக அக்.1ம் தேதி முதல் நேற்று வரை ரூ.375 கோடி வசூலாகியுள்ளது, என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி என்பது பிரதான வருவாயாக உள்ளது. இதன் மூலம், மக்களுக்கான அடிப்படை கட்டமைப்புகள், சுகாதார பணிகள், திடக்கழிவுகளை அகற்றுதல், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சென்னையில் 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். அவர்களிடமிருந்து ஆண்டுக்கு 2 முறை சொத்து வரி வசூல் செய்யப்படுகிறது. அதாவது, அரையாண்டுக்கு ரூ.850 கோடி வீதம், ஆண்டுக்கு ரூ.1,700 கோடி வீதம் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம் 1998ன் படி, சென்னை மாநகராட்சிக்கு முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்.1 முதல் செப்.30 வரையிலும், 2ம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்.1 முதல் மார்ச் 31 வரையிலும் செலுத்த வேண்டும். அவ்வாறு சொத்து வரி செலுத்தாத உரிமையாளர்கள் கூடுதலாக ஒரு சதவீதம் தனி வட்டியுடன் சொத்துவரி செலுத்த வேண்டும். ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்தும் மக்களுக்கு 5 சதவீதம் ஊக்க தொகை வழங்கப்படுகிறது. அதாவது, ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.

ஒவ்வொரு அரையாண்டிலும் பொதுமக்கள் தவறாமல் சொத்து வரி செலுத்துவதற்காக, சென்னை மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ்கள், செல்போனில் எஸ்.எம்.எஸ் மூலம் நினைவூட்டல் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்களில் ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்து வருன்றனர்.
இந்நிலையில், இந்த நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் ரூ.765 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டது. 2வது அரையாண்டில் மொத்தம் ரூ.850 கோடி சொத்து வரிவசூலிக்க வேண்டியுள்ள நிலையில், சலுகை அறிவித்து, கடந்த மாதம் 31ம் தேதிக்குள் ரூ.500 கோடி சொத்து வரியை வசூலிக்க மாநகராட்சி இலக்கு நிர்ணயித்தது. ஆனால் இதுவரை ரூ.370 கோடி வரி மட்டுமே வசூலாகியுள்ளது. எனவே, சொத்து வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்களின் பட்டியலை தயாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்.1 முதல் செப்.30 வரையிலும், 2ம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்.1 முதல் மார்ச் 31 வரையிலும் செலுத்த வேண்டும். மாநகராட்சி சார்பில் சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) சேவை மூலம் நினைவூட்டல் மற்றும் பணம் செலுத்துவதற்கான இணையதள இணைப்பு அனுப்பப்பட்டு வருகிறது. வரி வசூலிப்பாளர்களிடம் உள்ள பிஓஎஸ் கையடக்க கருவி உதவியுடன், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாக சொத்துவரி செலுத்தலாம். மண்டலம் அல்லது வார்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், மாநகராட்சியுடன் ஒப்பந்தம் செய்துள்ள குறிப்பிட்ட வங்கிகளில் நேரடியாக பணமாக செலுத்தலாம். ‘நம்ம சென்னை’, பேடிஎம் செயலிகள், மாநகராட்சி இணையதளம் (www.chennaicorporation.gov.in), சொத்துவரி சீட்டில் இடம்பெற்றுள்ள கியூஆர் கோடு மூலமாகவும் சொத்து வரி செலுத்தலாம். இந்த ஆண்டு முதல் அரையாண்டிற்கான சொத்துவரியாக ரூ.765 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. 2ம் அரையாண்டிற்கான சொத்துவரி அக்.1ம் தேதி முதல் நேற்று வரை வரை ரூ.375 கோடி செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 4 மாதங்களில் ரூ.430 கோடி அளவில் வசூலாகும், அனைத்து நிறுவனங்களும், சரியாக வரி செலுத்தி வருகின்றனர். அதிகளவில் வரி பாக்கி வைத்துள்ளவர்களுக்கு நோட்டீஸ் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர்.

 

The post இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரி ரூ.375 கோடி வசூல்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: