பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்த போது விபரீதம் தனியார் நிறுவன ஊழியரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை; உடன் வந்த தோழியும் படுகாயம்

சென்னை: பணி முடிந்து பைக்கில் வீட்டிற்கு திரும்பிய போது, தனியார் நிறுவன ஊழியரின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்தது. இதில் அவர் படுகாயமடைந்தார். அவர் பின்னால் அமர்ந்து இருந்த தோழியும் அதே கயிற்றில் சிக்கி படுகாயமடைந்தார்.சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் நிக்கி சரண் (33), தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து பைக்கில் பெண் தோழி வந்தனாவுடன் (33) வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். தேனாம்பேட்டை விஜயராகவா தெருவில் வரும் போது, நிக்கி சரண் கழுத்தில் மாஞ்சா நூல் சிக்கியது. உடனே, பைக்கை நிறுத்துவதற்குள் அவரது கழுத்தை மாஞ்சா நூல் அறுத்து ரத்தம் கொட்டியது. இதில், நிலை குலைந்த நிக்கி சரண் பைக்குடன் கீழே விழுந்தார். கீழே விழுந்த நண்பரை காப்பாற்ற, பைக்கில் வந்த அவரது தோழி வந்தனா மாஞ்சா நூலை கையில் பிடித்துள்ளார்.

அதில், மாஞ்சா நூலில் இருந்த கண்ணாடி துகள்கள் வந்தனாவின் கையை அறுத்து, ரத்தம் கொட்டியது. இருவரும் ரத்த வெள்ளத்தில் போராடி கொண்டிருந்தனர். இதை பார்த்த பொதுமக்கள் உடனே இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். நிக்கி சரணுக்கு கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்ததால் அதிக ரத்தம் வெளியேறியது. இதனால் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பரிந்துரைப்படி இருவரும் ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நிக்கி சரண் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, தடை செய்யப்பட்ட மாஞ்சா நூலில் பட்டம் விட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்த போது விபரீதம் தனியார் நிறுவன ஊழியரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை; உடன் வந்த தோழியும் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: