பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் 3 பேருக்கு வீட்டு காவல்

சென்னை: சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு கொடி காட்ட முயன்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மூன்று பேரை போலீசார் வீட்டு காவலில் வைத்தனர். சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு கொடி மற்றும் கருப்பு பலூன் பறக்கும் விடும் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், ரஞ்சன் குமார், டில்லி பாபு ஆகியோர் கட்சியினருக்கு நேற்று முன்தினம் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியத்தை ராயபுரத்தில் உள்ள அவரது வீட்டிலும், ரஞ்சன் குமாரை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அவரது வீட்டிலும், வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டில்லி பாபுவை எம்கேபி நகரில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் வீட்டு காவலில் வைத்தனர். இதை அறிந்த காங்கிரசார் மாவட்ட தலைவர்கள் இருவரது வீடுகளுக்கு முன்பும் நேற்று காலை முதல் குவியத் தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ரஞ்சன் குமார் மற்றும் காங்கிரசாரை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் போலீசார் அடைத்து வைத்தனர். அதேபோன்று எம்.எஸ்.திரவியம் மற்றும் அங்கு திரண்டு நின்ற காங்கிரசாரை அவரது அலுவலகத்திலும் அடைத்து வைத்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவியது.

கே.எஸ்.அழகிரி கண்டனம்: பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்த முயன்ற, தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமார், வடசென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் எம்.எஸ். திரவியம், வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெ.டில்லிபாபு ஆகியோரை காவல் துறையினர் வீட்டுக் காவலில் வைத்ததை வன்மையாக கண்டிக்கிறேன். காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்க சென்னை வந்த திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மணிகண்டனும் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் துறையினரின் அத்துமீறிய போக்கை வன்மையாக கண்டிக்கிறேன் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

The post பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் 3 பேருக்கு வீட்டு காவல் appeared first on Dinakaran.

Related Stories: