நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி’ என பெயர் சூட்டினார் பிரதமர் மோடி!

பெங்களூரு: நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் -3 லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி’ என பிரதமர் மோடி பெயர் சூட்டினார். நிலவின் தென் பகுதியை துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து கடந்த 23ம் தேதி, விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக இறங்கி சாதனை புரிந்தது. இதற்கு உலக நாடுகள் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், பிரதமர் மோடி விஞ்ஞானிகளை பாராட்டுவதற்காக இன்று காலை பெங்களுருவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு சென்றிருந்தார்.

இஸ்ரோ மையம் சென்ற அவரை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகள் வரவேற்றனர். சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், சந்திரயான் 3 மாதிரியை நினைவுப் பரிசாக வழங்கினார். பின்னர், இஸ்ரோ தலைவர் படம்பிடிக்கப்பட்ட நிலவின் போட்டோக்களை வழங்கினார். பின்னர் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் கால் பதித்தது குறித்து, இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கமாக பிரதமர் மோடிக்கு எடுத்துக் கூறினார்.

அதன்பின் பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு இடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது, உங்களுக்கு மத்தியில் இருப்பது, எனக்கு தனிப்பட்ட மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பல பிறவிகள் காத்திருந்து கிடைத்த மகிழ்ச்சி போன்று உள்ளது. உடல், மனம் என அனைத்தும் மகிழ்ச்சியால் பூரித்து கொண்டுள்ளது. சில நேரங்களில் மனிதர்கள் அதிக அளவில் உணர்ச்சிவசப்படுவார்கள். அதேபோன்ற உணர்ச்சி தற்போது எனக்கு ஏற்பட்டது. நான் தென்ஆப்பிரிக்காவில் இருந்த போதிலும், மனம் முழுவதும் உங்களுடனேயே இருந்தது. நான் உங்களுக்கு தொந்தரவு செய்துவிட்டேன் போன்ற எண்ணம் ஏற்படும்.

அதிகாலையிலேயே உங்கள் அனைவரையும் அழைத்து தொந்தரவு செய்து விட்டேன். சந்திராயனுக்காக எவ்வளவு நேரம் வேலை செய்து இருப்பீர்கள். உங்களுக்கு துன்பம் ஏற்பட்டிருக்கும். இந்தியா வந்ததுமே எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக உங்களை பார்க்க வேண்டும் என நினைத்தேன். சல்யூட் அடிக்க நினைத்தேன். உங்களுடைய உழைப்பிற்காக, தைரியத்திற்காக, இலக்கை அடைய வேண்டும் நோக்கத்திற்கான, திடமான சிந்தனைக்கான சல்யூட். இது ஒரு சாதாரணமான வெற்றியே அல்ல. இந்த அளவில்லா விண்வெளியில் இந்திய விஞ்ஞானிகளுக்கான சங்கநாதம் இது.

இந்தியா நிலவில் கால் வைத்திருக்கிறது. நம்முடைய நாட்டின் கவுரவத்தை நிலவில் நிலைநாட்டியிருக்கிறோம். இதுவரை யாரும் செய்யாத வேலையை செய்திருக்கிறோம். இதுதான் இன்றைய இந்தியா. உணர்ச்சி மிகுந்த பாரதம். விழிப்பு மிகுந்த பாரதம். புதிய வழியில் சிந்திக்கும் பாரதம்.லேண்டர் தரையிறங்கிய இடம்” சிவசக்தி” என அழைக்கப்படும் மேலும் நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் இந்திய கொடியை நாட்டிய ஆகஸ்ட் 23ம் தேதி, இனி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும். சந்திரயான் -2 லேண்டர் நிலவில் விழுந்த இடம், ‘திரங்கா’ (மூவர்ணகொடி) என அழைக்கப்படும்; இந்தியா எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் இது ஒரு உத்வேகமாக இருக்கும்; எந்த தோல்வியும் முடிவல்ல என்பதை இது நமக்கு உணர்த்துகிறது என பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு இடையே உரையாற்றினார்.

 

The post நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி’ என பெயர் சூட்டினார் பிரதமர் மோடி! appeared first on Dinakaran.

Related Stories: