தமிழ்நாடு கோயில்களுக்கு சென்றது பாக்கியம்; இந்தியாவில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது: அயோத்தியில் பிரதமர் மோடி பேச்சு

அயோத்தி: இந்தியாவில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அயோத்தியில் புதியதாக கட்டப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழா இன்று பிரதமர் மோடி தலைமையில் கோலாகலமாக நடந்தது. அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்டுள்ள ராமருக்கு முதல் பூஜையை பிரதமர் செய்தார். பாலராமர் பிரதிஷ்டை முடிந்த நிலையில் அயோத்தி கோயில் வளாகத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி; சன்னியாசிகள், பக்தர்களை அயோத்திக்கு வரவேற்கிறேன். இந்த நன்னாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

பல ஆண்டு காத்திருப்புக்கு பிறகு இன்று ராமர் வந்துவிட்டார். ராமர் இனி கூடாரத்தில் வசிக்க வேண்டிய நிலை இருக்காது. கூடாரத்தில் இருந்த பால ராமருக்கு தற்போது அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க தருணம் மட்டுமல்ல புதிய காலச்சக்கரத்தின் துவக்கம். 1,000 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த நாளை மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள். இந்த நேரத்தில் கடவுள் ராமர் நமக்கு ஆசிர்வாதம் அளிக்கிறார். ராமர் கோயில் திறப்பு மூலம் அடிமை மனநிலைக்கு முடிவுகட்டியுள்ளோம். நமது தியாகத்தில் சில குறைபாடுகள் இருந்தன. குறைகள் இருப்பின், ராமர் நம்மை மன்னிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

தெய்வீக அனுபவத்தை நான் உணர்கிறேன். நாட்டில் நியாயத்தை வழங்குவதற்கு நியாய ராஜ்ஜியம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 11 நாள் விரதத்தின் போது ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் உள்ளிட்ட கோயில்களில் வழிபட்டேன். பகவான் ராமர் நாட்டு மக்களின் மனங்களில் உள்ளார். ராமரின் ஆசிர்வாதத்தால் ராமர் பாலம் தொடங்கும் அரிச்சல்முனையில் நேற்று வழிபட்டேன். ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றிருந்தார்; ராமர் வருகைக்காக அயோத்தி பல காலம் காத்திருந்தது. இந்தியா இன்றுதான் தீபாவளியை கொண்டாடுகிறது. ராமர் கோயில் கட்ட வழிவகை செய்த இந்திய நீதித்துறைக்கு நன்றி.

ராமர் கோயில் இந்தியாவின் அமைதி, ஒற்றுமைக்கான அடையாளம். ராமர் நம்முடையவர் மட்டுமல்ல, அனைவருக்குமானவர். கடவுள் ராமர் தேசத்தை இணைக்கிறார். ராமரின் புகழ் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சென்று சேர்ந்துள்ளது. யாரையும் வீழ்த்தியதால் கிடைத்த வெற்றி அல்ல; கண்ணியமாக கிடைத்த வெற்றி. ராம் என்பது யாரையும் எரிக்கும் நெருப்பல்ல; சக்தியை கொடுக்கும் ஆற்றல். இந்தியாவை போன்று உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்கள் இன்றைய நாளை கொண்டாடி வருகின்றனர்.

The post தமிழ்நாடு கோயில்களுக்கு சென்றது பாக்கியம்; இந்தியாவில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது: அயோத்தியில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: