வேண்டியதை அருளும் திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்..!!

திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். இந்தத் தலம் அஷ்ட வீரட்டாணத்தில் எட்டாவது வீரட்டாணத்தலமாகத் திகழ்கிறது. வேண்டியதை வேண்டியபடி அருளும் கற்பக விருட்சமாக அருள்புரிகிறாள், அன்னை அபிராமியம்மை. சரபோஜி மன்னர் ஆட்சிக்காலத்தில் பக்தர் ஒருவருக்காக அபிராமி அம்பாள் `தை அமாவாசையை’ முழுப் பௌர்ணமியாக்கி `அபிராமி அந்தாதி’ அருளச் செய்த தலம். இங்கு அன்னை அபிராமி தன்னை வழிபடும் பக்தர்களின் வாழ்வில் இருள்நீக்கி ஒளியேற்றி, அவர்கள் வேண்டியதை எல்லாம் அருள்புரிகிறாள்.

அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் வருடாவருடம் சித்திரை மாதம் மக நட்சத்திரத்தில் காலசம்ஹாரப் பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இதை தரிசித்தால் ஆயுள் பலம் கூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இந்தத் தலத்தில் அம்மையும் அப்பனும் நேருக்கு நேர் நோக்கியபடி சந்நிதி கொண்டருள்கிறார்கள். மூலவர் மேற்கே பார்த்தும் அபிராமி அம்பாள் கிழக்கே பார்த்தும் அமைய இத்தலம் நித்தியத் திருக்கல்யாணத் தலமாக திகழ்கிறது.

அதனால், திருக்கடவூரில் பூர்ணாபிஷேகம் 100 வயது பூர்த்தி, கனகாபிஷேகம், சதாபிஷேகம், பீமரதசாந்தி, மணிவிழா மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்துகொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை. இந்தச் சடங்குகளின்போது 16 கலசங்கள் வைத்து, அருகில் நவதானியங்களில் நவகிரகங்களை ஆவாஹனம் செய்து, ஹோமம் செய்கின்றனர் பக்தர்கள்.

அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தில் யமன் வீசிய பாசக்கயிற்றின் தடத்தை இன்றும் சுவாமிக்கு பால் அபிஷேகம் காணலாம். திருக்கடவூர் கோயிலில் முதலில் வழிபட வேண்டிய மூர்த்திகள் அகத்தியர் வழிபட்ட பாபகரேஸ்வரர் மற்றும் புலத்தியர் வணங்கிய புண்ணியகரேஸ்வரர் ஆவர்.

இவர்களை வணங்கியபின்பே, மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும் என்பது ஐதிகம். இவ்விருவரையும் வணங்கும்போது பாவங்கள் நீங்கி, புண்ணியம் உண்டாவதாக நம்பிக்கை. புண்ணியகரேஸ்வரருக்கு தனிச்சந்நிதி உள்ளது. சித்தர்கள் பலர் வழிபாடு செய்த தலம் இது. அதில் முக்கியமானவர் பாம்பாட்டி சித்தர். நவகிரக சந்நிதி இங்கு கிடையாது. கிரக சாந்தி செய்வோர் கால சம்கார மூர்த்திக்கே பூஜை செய்து பலன் பெறுகிறார்கள்.

கோயிலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. முதலாம் ராசராசன் முதல் மூன்றாம் ராசராசன் வரைப் பல சோழ மன்னர்கள் கோயிலுக்கு நிவந்தம் கொடுத்திருக்கிறார்கள். பாண்டிய மன்னர்களான சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் மற்றும் குலசேகரப் பாண்டியன் ஆகிய மூவரின் கொடைத்தன்மையை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.

The post வேண்டியதை அருளும் திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன்..!! appeared first on Dinakaran.

Related Stories: