அரசியல் தலைவர்கள் டிஷ்யூம்… டிஷ்யூம்… கூட்டணிக்காக இலவு காக்கும் கிளியாக அதிமுக: அமமுக போஸ்டரால் பரபரப்பு

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி அமைக்க அதிமுக போராடி வருகிறது. கூட்டணிக்கு யாரும் முன்வராததால், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கேட்கும் தொகுதிகளை கொடுத்து இழுக்கும் முயற்சியில் அதிமுக இறங்கி உள்ளது. இந்நிலையில் விழுப்புரம் தெற்கு மாவட்ட அமமுக துணை செயலாளர் கில்லி.கர்ணா என்ற பெயரில், அதிமுகவை விமர்சித்து பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‘இலவு காக்கும் கிளி’ என்ற தலைப்பில், மெகா கூட்டணி பாமக, தேமுதிக, தமாக, இஜக, புதக, புநீக என்று அதன் அருகில் இலவங்காய் படத்தை வைத்தும், மற்றொரு கிளையில் இரட்டை இலையின் மீது கிளி அமர்ந்து காத்திருப்பதை போன்று படங்களை வைத்துள்ளனர். அதன் கீழ் தகுதியான கட்சி, சின்னம், தகுதியானவரிடம் இருந்தால்தான் மதிப்பு என்று எழுதப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகின்றன.

* தேர்தல் கூட்டணிக்கு பாஜ கதவு திறப்பு அமித்ஷா கூறியதை பார்க்கவில்லை: ஒற்றை வரியில் நழுவிய எடப்பாடி
சேலம் மாவட்டம், மேச்சேரி பத்ரகாளி அம்மன் கோயிலில், சாமி தரிசனத்திற்காக அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று வந்தார். அப்போது, செய்தியாளர்கள் அவரிடம், தேர்தல் கூட்டணிக்காக அதிமுகவிற்கு பாஜவின் கதவுகள் திறந்தே இருப்பதாக, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளாரே? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ‘‘அமித்ஷா கூறியதை நான் கேட்கவும் இல்லை, பார்க்கவும் இல்லை’’ என்று ஒற்றை வரியில் பதில் அளித்து விட்டு நழுவினார். வழக்கமாக பாஜ கூட்டணி குறித்த கேள்வி எழுந்தால் ஆவேசமாகும் எடப்பாடி பழனிசாமி, நேற்று ஒற்றை வரியில் சூசகமாக பதில் சொல்லி விட்டு நழுவியது பாஜ கூட்டணிக்கான அச்சாரமா? என்ற கேள்வியை அரசியல் களத்தில் எழுப்பியுள்ளது.

* அமித்ஷா சொன்னது எடப்பாடிக்குதான்: ஓபிஎஸ் சூசகம்
தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் கட்சி நிகழ்வில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் இருந்து விமான மூலம் நேற்று மாலை மதுரை வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவுடன் கூட்டணி குறித்து அமித்ஷா கூறியிருப்பது ஒன்றிய உள்துறை அமைச்சரின் பெருந்தன்மையை காட்டுகிறது. அமித்ஷா குறிப்பிட்டது உங்கள் அணியையா அல்லது எடப்பாடி அணியையா என்கிறீர்கள். நாங்கள் தொடர்ந்து என்டிஏ கூட்டணியில் இருந்து கொண்டு தான் இருக்கிறோம். விலகி இருப்பது எடப்பாடி பழனிச்சாமிதான். என்டிஏ கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும் என மோடி கூறி வருவதாக சொல்கிறீர்கள். அவரவர் கட்சியை உயர்த்தி காண்பிப்பது அந்தந்த தலைவர்களின் பண்பாடு. உறுதியாக பாஜ கூட்டணி இந்தியாவை ஆளுகிற தனி பெரும்பான்மை பெறும். இவ்வாறு கூறினார்.

அவரிடம் நிருபர்கள், ‘‘கூட்டணிக்காக பாஜ உங்களிடம் வராமல் எடப்பாடி இடம் சென்றிருக்கிறதே’’ என கேட்டபோது, ‘‘இப்பவே சண்டையை ஆரம்பித்து வைக்கிறீர்கள்’’ என்றார். ‘‘உங்கள் பின்னால் இருப்பவர்கள் கூலி ஆட்கள். உண்மையான அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறி வருகிறாரே?’’ என நிருபர்கள் கேட்டதற்கு பதிலளித்த ஓபிஎஸ், ‘‘உண்மையான கூலி ஆட்கள் யார் என்பது நாடாளுமன்றத் தேர்தலில் தெரியும். தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டி என்பதையும் உறுதியாக உங்களிடம் சொல்வேன்’’ என்றார்.

The post அரசியல் தலைவர்கள் டிஷ்யூம்… டிஷ்யூம்… கூட்டணிக்காக இலவு காக்கும் கிளியாக அதிமுக: அமமுக போஸ்டரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: