‘‘ஒரு சிலரின் தவறுகளால் காவல்துறைக்கு களங்கம்’’ போலீசார் பொதுமக்களிடம் கண்ணியமாக நடக்க வேண்டும்: மதுரை கமிஷனர் அறிவுறுத்தல்

மதுரை: மதுரை அருகே, பரவை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு எஸ்ஐ தவமணி, பூ விவசாயி ஒருவரை ஆபாசமாக திட்டிப் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சிறப்பு எஸ்ஐ தவமணியை பணியிடை நீக்கம் செய்து, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார். இந்நிலையில், மதுரை மாநகர காவல் காவல்துறையினரிடம் கமிஷனர் லோகநாதன் நேற்று வாக்கி-டாக்கி மூலம் பேசியதாவது: ஒரு செக் போஸ்டில் நடந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு சென்றுள்ளோம். தற்போது அனைவரது கைகளிலும் செல்போன் உள்ளது. 24 மணி நேரமும் கண்விழித்து கஷ்டப்பட்டு பணிபுரிகிறோம். ஒரு சிலரின் தவறுகளால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் களங்கம் ஏற்படுகிறது. காவல்நிலையம் வரும் மக்களிடமும், வாகன சோதனையின்போதும் சட்டப்படி எது சரியானதோ அது குறித்து சொல்லும் விதம் உள்ளது.

உரத்த குரலில் கத்திதான் சொல்ல வேண்டும் என்றோ, ஆபாசமான வார்த்தைகளால் சொல்ல வேண்டும் என்றோ கிடையாது. சட்டப்படி செய்ய வேண்டியதை நாம் செய்யத்தான் போகிறோம். போலீசார் அனைவரும் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என எச்சரிக்கையாகவும், அறிவுறுத்தலாகவும் கூறுகிறேன். தேவையற்ற வார்த்தைகளை பேசுவது தவிர்க்கப்பட வேண்டும். மதுரை மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் தேவையில்லாமல் பேசக்கூடிய (ஷார்ட் டெம்பர்) போலீசார் குறித்த விவரங்களை அதிகாரிகள் மூலம் கேட்டுள்ளோம். அதுபோன்ற போலீசாரை தனியாக அழைத்து எச்சரிக்கை விடுக்கப்படும். அதனையும் மீறி தேவையற்ற வார்த்தைகளை பேசினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு தற்போது நடந்துள்ள சம்பவமே உதாரணம். இவ்வாறு கமிஷனர் பேசியுள்ளார். இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

 

The post ‘‘ஒரு சிலரின் தவறுகளால் காவல்துறைக்கு களங்கம்’’ போலீசார் பொதுமக்களிடம் கண்ணியமாக நடக்க வேண்டும்: மதுரை கமிஷனர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: