அதிகம் லாபம் தரும் செம்மறி ஆட்டு கிடாய்கள்

*கால்நடைத்துறை அதிகாரி விளக்கம்

மன்னார்குடி : ஆடு வளர்ப்பு என்பது இன்றைக்கு அதிக அளவில் லாபம் தரும் தொழில்களில் ஒன்றாக திகழ்கிறது. அதிலும், முக்கியமாக செம்மறி ஆட்டு கிடாய்கள் அதிகம் லாபம் தரும். குறுகிய காலத்தில் வேகமாக எடை அதிகரிக்கும் ரகங் களை தேர்ந்தெடுக்க வேண்டும்.செம்மறி ஆடுகள் புற்களை மட்டுமே விரும்பி உண்பதால் சுதந்திரமாக மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன. இவை வெள்ளாடுகள் போன்று தலைகளை விரு ம்புவதில்லை.

இதனால், ஓரளவு இயற்கை முறையில் களைகளை கட்டுப்படுத்த முடியும். மேய்ச்சல் நிலங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் செம்மறி ஆடு வளர்ப்பது எளிது. விலை நிலங்களில் அறுவடை முடிந்த பின் கூலிக்கு கிடை நிறுத்தப் படுகிறது. இதற்கு பலனாக செம்மறி ஆட்டு புழுக்கைகள் மற்றும் சிறுநீர் போன்றவை அந்த நிலத்திற்கு உரமாக பயன்படுகிறது. பகலில் இவற்றால் இடக்கூடிய சாணம் வயலில் உரமாகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை மன்னார்குடி கோட்ட உதவி இயக்குனர் டாக்டர் ஆறுமுகம் கூறியது, செம்மறி ஆடுகளை மேய்க்கும் போது கட்டுப் படுத்துவது எளிது. மாலையில் வளர்ப்பு புல் வகைகளை அறுவடை செய்து உணவாக கொடுக்க லாம். அடர்தீவனம் அவசியம் கொடுக்க வேண்டும்.

கம்பு, மக்காச் சோளம், கடலை புண்ணாக்கு, உளுந்து இவற்றுடன் தாது உப்பு கலவை தகுந்த விகிதத்தில் கலந்து அளிப்பதால் செம்மறி ஆடுகள் மிகவும் திடமாக வளரும். 3 மாதங்களில் முதல் குடற்புழு நீக்கம் செய்து பின்னர் 3 மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்கம் செய்வது மூலம் எடை விரைவாக அதிகரிக்கும். குடற்புழு நீக்க செய்ய அல்பெண்ட் சோல், பெண்ட சோல் போன்றவற்றை கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி உடல் எடைக்கு தகுந்தவாறு பயன்படுத்த வேண்டும்.

வேப்ப இலைகளை சோற்றுக் கற்றாழை உடன் கலந்து தினமும் கொடுப்பதன் மூலம் இயற்கையான முறையில் குடற்புழு நீக்க செய்வதோடு நல்ல வளர்ச்சி மற்றும் நல்ல இனப்பெருக்க வீதத்தை உறுதி செய்ய இயலும் என்றார்.தடுப்பூசிகள் குறித்து தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ஹமீது அலி கூறியது, செம்மறி ஆடுகளுக்கு அந்தந்த பருவங்களில் தாக்கும் நோய்களுக்கு ஏற்ப தடுப்பூசிகள் போட வேண்டும்.

மிக முக்கியமாக கோடை மழைக்கு முன்னர் சித்திரை மாதம் துள்ளுமாரி நோய் ஆனி அல்லது ஆடியில் வெக்கை நோய் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும். அடை மழை காலத்திற்கு முன் நீல நாக்கு நோய் தடுப்பூசி போட வேண்டும். இரவில் தரையில் அரை அடி உயரம் மணல் பரப்பிய கொட்டில்களில் அடைப்பதன் மூலம் நோய்கள் பரவுவதை தவிர்க்கலாம். மழைக்காலங்களில் கொட்டில் ஈரமாகாமல் பார்த்துக் கொண்டால் நோய் தாக்குதல் இருந்து தடுக்கலாம் என்றார்.

செம்மறி ஆட்டு எரு பயன்கள் குறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் சத்திய ஜோதி கூறியதாவது:கிடங்குகளின் கழிவுகளின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மண்புழு உரத்தில் அதிக நுண் ஊட்டச்சத்துக்கள் காணப்படுவதால் தோட்டக்கலை பயிர்கள் நன்கு வளரும். பழங்கள் மிகவும் சுவையாக இருக் கும். மாடி தோட்டங்களுக்கு சத்தான இயற்கை குணமாக பயன்படுகிறது. மேலும், செம்மறியாட்டு புழுக்கைகள் காயவைத்து அதனை பொடியாக்கி மீன்களுக்கு உணவாக பயன்படுத்தலாம் என்றார்.

The post அதிகம் லாபம் தரும் செம்மறி ஆட்டு கிடாய்கள் appeared first on Dinakaran.

Related Stories: