பெரியபாளையம் பவானியம்மன் கோயில் ஆடித்திருவிழா

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் பவானியம்மன் கோயில் ஆடித்திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாதயாத்திரை வந்தனர். பெரியபாளையத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் ஆடித்திருவிழா கடந்த 17ந் தேதி தொடங்கியது. இந்தவிழா 14 வாரங்கள் நடைபெறும். இத்திருவிழாவிற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்து கார், பஸ், வேன், லாரி, ஆட்டோ, மாட்டுவண்டி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து சனிக்கிழமை இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல்வைத்து, மொட்டையடித்து, வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை வலம் வந்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.

இந்நிலையில் நேற்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை என்பதால் அதிகாலையில் கோயில் வளாகத்தில் பந்தக்கால் நடப்பட்டது. பின்னர் பவானி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனைத் திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம், தண்டலம், கன்னிகைப்பேர், ஆரணி, மஞ்சங்காரணை, புதுவாயல், கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிகளிருந்து ஏராளமான பெண்கள், சிறுவர்கள் மஞ்சள், சிவப்பு ஆடை அணிந்து தங்கள் ஊர்களிலிருந்து பாதயாத்திரையாக நடந்து பெரியபாளையம் பவானியம்மனை தரிசனம் செய்தனர்.

திருத்தணி: திருத்தணி நகரத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெருவில் எல்லையம்மன் கோயில் உள்ளது. இங்கு, நேற்று ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு வளையல் காப்பு அணிவிக்கப்பட்டு மஞ்சள் காப்பு, மலர் அலங்காரம் செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து, அம்மன் முன்பு கலசம் வைத்து யாகம் வளர்க்கப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் பாயசம், வெண் பொங்கல், கேசரி, சுண்டல் வழங்கப்பட்டது.

மேலும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள், அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை இந்திராகாந்தி, பேன்சி ராமு, மளிகைச்செல்வம் உள்ளிட்டோர் செய்திருந்தனர். முளைப்பாரி ஊர்வலம்: ஆடி மாதம் முதல் வாரத்தை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆலய வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் முளைப்பாரி சுமந்துசென்று, கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகளில் வலம் வந்து இறுதியாக குளத்தில் கரைத்தனர்.

The post பெரியபாளையம் பவானியம்மன் கோயில் ஆடித்திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: