தேர்தல் பணி தொடங்கிடுச்சு… சுற்றுப்பயணம் ஸ்டார்ட் ஆகிடுச்சு… ஜன.23ல் மதுரைக்கு மோடி வருகை: திருப்பரங்குன்றத்தில் தரிசனம் செய்ய திட்டம்

மதுரை: தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு கட்சிகளும் களமிறங்கி மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். வலுவான கூட்டணியினருடன் திமுக தேர்தல் பணிகளை கவனித்து வருகிறது. பல்வேறு மக்கள் நலத்திட்டங்களால் ஆளும் அரசு மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள நிலையில், வலிமையான கூட்டணி பலத்தாலும் திமுக அடுத்தகட்டத்தை நோக்கி சென்று வருகிறது. ஆனால் பாஜ, அதிமுக கூட்டணியில் என்னென்ன கட்சிகள் சேர்கின்றன என்ற முடிவு எட்டப்படாமல் குழப்பமே நிலவி வருகிறது. பாமகவின் அன்புமணி தரப்பினர் மட்டுமே அந்த அணியில் சேர்ந்துள்ளனர்.

கூட்டணியில் டிடிவி.தினகரன், ஓபிஎஸ் போன்றோரும், பிற கட்சிகளும் சேராத நிலையே தொடர்கிறது. வலுவற்ற கூட்டணியை கருத்தில் கொண்டு அமித்ஷா உள்ளிட்ட பாஜ தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி பயணப்பட்டு, ஆலோசனைகள் நடத்தி செல்கின்றனர். ஆனாலும் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள பிரதமர் மோடி திட்டமிட்டுள்ள நிலையில், அதற்குள் கூட்டணியை இறுதி செய்து மோடி பங்கேற்கும் கூட்டங்களில் கூட்டணி கட்சி தலைவர்களை மேடையேற்ற பாஜ மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது.

கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது கிட்டத்திட்ட 10 முறை தமிழகம் வந்த பிரதமர் மோடி, அதன்பிறகு இருமுறை மட்டுமே தமிழகம் வந்து உள்ளார். தற்போது, சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்துக்கு அடுத்தடுத்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி, வரும் 23ம் தேதி மதுரைக்கு பிரதமர் மோடி வருகிறார். மதுரை வண்டியூர் ரிங் ரோட்டில் வரும் 23ம் தேதி பாஜ சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதற்கான அனுமதி கேட்டு, மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாஜ, அதிமுக தலைவர்கள் மனு அளித்தனர். பின்னர் நிருபர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம், ‘‘23ம் தேதி பொதுக்கூட்டத்திற்கு கூட்டணியில் தேமுதிகவை எதிர்பார்க்கலாமா?’’ எனக் கேட்டதற்கு, ‘‘மதுரை வரும்போது எங்களது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து கேளுங்கள். அவர் பதில் சொல்வார்’’ என்றார்.

மதுரை பொதுக்கூட்டத்தை திருப்பரங்குன்றம் பகுதியில் நடத்த வேண்டும் என்று முதலில் பாஜவினர் முடிவு செய்த நிலையில், அதிகளவில் கூட்டம் சேர்க்கும் வகையில் பாண்டிகோவில் அருகே வண்டியூர் ரிங்ரோடு திடலில் நடத்த முடிவாகி இருக்கிறது. எனினும், பொதுக்கூட்டத்திற்கு வரும் பிரதமர் மோடி, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடக்க உள்ள திடலை பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று காலை பார்வையிடுகிறார். மதுரையை தொடர்ந்து பிரதமர் மோடி வரும் 28ம் தேதி குமரியில் நடக்கும் பொதுக்கூட்டதிலும் பிரசாரம் செய்ய உள்ளார்.

செல்லூர் ராஜூ ‘ஸ்வாகா’ பாஜ கட்சியினர் அதிருப்தி
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின் பேரில், பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வாங்க கூட்டாக போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தோம். பாஜவின் ராமனிவாசன், மாரி சக்கரவர்த்தி தலைமையில் கமிஷனரிடம் கொடுத்த மனுவிற்கு நாங்கள் எல்லாம் கூடப்போய், ‘ஸ்வாகா’ பாடிட்டு வந்திருக்கிறோம்’’ என்றார். ‘ஸ்வாகா’ என்றால் ‘கோரசாக ஒத்து ஊதுதல்’ போன்ற பொருளில் செல்லூர் ராஜூ பேட்டியளித்தது, அங்கிருந்த பாஜ கட்சியினரை அதிருப்திக்குள்ளாக்கியது.

பிரதமர் வருகைக்குப்பின் தொகுதி பங்கீடு பேச்சு: நயினார் தகவல்
கோவை விமான நிலையத்தில் பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘தேசிய செயல் தலைவர் வந்தபோது தொகுதி பங்கீடு, அரசியல் குறித்து பேசவில்லை. தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது. பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து சென்ற பிறகு, அது குறித்து பேசுவோம்’’ என்றார்.

பூத் கமிட்டிக்கு ஆட்கள் தேவை கூவிகூவி அழைக்கும் பாஜ தேசிய செயல் தலைவர்
கோவை சிங்காநல்லூர் தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் சிங்காநல்லூரில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பாஜ தேசிய செயல் தலைவர் நிதின் நபின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில், ‘‘ பா.ஜவில் மட்டுமே பூத் கமிட்டி உறுப்பினர் கூட கட்சியின் தலைவராக முடியும் என்ற நிலை உள்ளது. நம் கட்சி பூத் கமிட்டிக்கு இன்னும் ஆட்கள் தேவை. கூடுதலாக வேலை செய்யுங்கள். நீங்கள் வேலை செய்தால் தான் அடுத்து நமக்கு வெற்றி கிடைக்கும். இங்கே மகளிரை பார்க்கும் போது பாரத மாதா போல் தெரிகிறார்கள். மோடியின் மனதின் குரல் அனைத்து வீடுகளுக்கும் கேட்க வேண்டும். 90 நாட்களில் தேர்தல் நடக்க போகிறது. அதற்குள் நாம் தயாராக இருக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: