மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 307 மனுக்கள் பெறப்பட்டது

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் பொதுமக்களிடமிருந்து 307 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இம்மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.

இதில் நிலம் சம்பந்தமாக 84 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 43 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 35 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 51 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 94 மனுக்களும் என மொத்தம் 307 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து இக்கூட்டத்தில், 2019ம் ஆண்டு அதிக அளவில் கொடி நாள் நிதி வசூல் செய்த அலுவலர்களுக்கு தலைமைச் செயலாளர் அவர்களின் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெள்ளி பதக்கங்களை மாவட்ட கலெக்டர் வழங்கி பாராட்டினார்.

மேலும், திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பிரதமரின் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் வங்கி கடனாக ரூ.12 லட்சம் பெற்ற 4 மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் மானியத் தொகையான ரூ.60 ஆயிரத்திற்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணியன், சமூக பாதுகாப்பு திட்டம் துணை கலெக்டர் மதுசூதனன், முன்னாள் படை வீரர்கள் நலத்துறை உதவி இயக்குனர் ராஜலட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, பேச்சுப் பயிற்சியாளர் சுப்புலட்சுமி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

  • பொன்னேரியில் முகாம்

    பொன்னேரி: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் தங்கள் குறைகளை கேட்க வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுப்பது வழக்கம். அப்போது அனைத்து கிராம மக்களும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் மனு கொடுப்பதால் மனு கொடுக்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர். இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், அந்தந்த தாலுகா அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் தாசில்தார்கள் மூலமாக வருவாய்த்துறை அலுவலர்கள் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் குறைத்துக்கும் முகாம் நடைபெறுகிறது.

இந்த நிலையில் பொன்னேரியில் உள்ள தாலூகா அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் தாசில்தார் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மூலம் பொன்னேரி, சோழவரம், மீஞ்சூர், பழவேற்காடு உள்ளிட்ட பகுதியிலிருந்து பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, ஜாதி சான்று, வருமானச் சான்று, குடும்ப அட்டை சொத்து சம்பந்தமான விவரங்களை மனுக்களாக பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நேற்று அறுபதுக்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுக்கப்பட்டன. தாசில்தார் தலைமையில் நடந்த முகாமில் 40க்கும் மேற்பட்ட மனுக்கள் தீர்வு காணப்பட்டு மீதி உள்ள மனுக்கள் பரிசிலனை நடத்தப்பட்டு வருகிறது.

The post மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 307 மனுக்கள் பெறப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: