ஓய்வூதியர்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை: தமிழ்நாடு அரசு ஆணை

சென்னை: ஓய்வூதியதாரர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என மாவட்ட கருவூல அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவோருக்கு மருத்துவ காப்பீடு அளிக்கும் திட்டத்திற்காக கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் தரவுத்தளத்தில் இருந்து விவரங்கள் எடுக்கப்பட்டு உரியவர்களுக்கு மருத்துவ காப்பீடு அடையாள அட்டை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அடையாள அட்டையில் பயனாளி மற்றும் துணைவர் புகைப்படத்தை இணைக்க வேண்டும் என்று ஓய்வூதியர்கள் சங்கங்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளை அளிப்பதற்கான தகுந்த படிவங்களை ஓய்வூதியதாரர்களுக்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் தேசிய சுகாதார காப்பீட்டு திட்டத்தின் இணையதளத்தின் பதிவேற்றம் செய்யப்படும். இதன் பின்பு பயனாளிகள் தங்களுக்கான அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ள முடியும்.

ஆண்டுதோறும் வாழ்வுச் சான்றிதழை அளிப்பதற்கான நேர்காணலுக்காக கருவூல அலுவலகங்களுக்கு வருவோரிடம் அலுவலர்கள் படிவங்களை அளித்து பூர்த்தி செய்து பெற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த படிவங்களின் அடிப்படையில் அடையாள அட்டையில் ஓய்வூதியதாரர்களின் விவரங்கள் திருத்தப்படுவதோடு, புகைப்படமும் பதிவேற்றம் செய்யப்படும். இது குறித்த கடிதத்தை அனைத்து மாவட்ட கருவூல அதிகாரிகள், சென்னையில் உள்ள சம்பளம் வழங்கும் அதிகாரி ஆகியோருக்கு தமிழ்நாடு கருவூலம் மற்றும் கனக்குத்துறை ஆணையர் கே.விஜயேந்திர பாண்டியன் அனுப்பியுள்ளார்.

The post ஓய்வூதியர்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை: தமிழ்நாடு அரசு ஆணை appeared first on Dinakaran.

Related Stories: