நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை மறுதினம் தொடக்கம்: சொகுசு கப்பல் ‘‘செரியபாணி” வந்தடைந்தது

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு நாளை மறுதினம் முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குகிறது.  இதற்காக நாகப்பட்டினம் துறைமுகத்தில் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து செரியபாணி என்ற பயணிகள் சொகுசு கப்பல் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு நேற்று மாலை வந்து சேர்ந்தது.

இதனால் நாகப்பட்டினம் துறைமுகம் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குடியுரிமை துறை, சுங்கத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினரும் வந்துள்ளனர். நாகப்பட்டினம் துறைமுகத்தில் நாளை மறுதினம் (10ம் தேதி) காலை 7.30 மணிக்கு கப்பல் புறப்பட்டு 3 மணி நேரத்தில் இலங்கை காங்கேசன் துறைமுகம் சென்றடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

* விமான நிலைய நடைமுறை
ஒரு நபருக்கு 18 சதவீத ஜிஎஸ்டியுடன் ரூ.6,500 என டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு பயணி 50 கிலோ எடையுள்ள பொருட்களை கட்டணமின்றி எடுத்து செல்ல முடியும். பாஸ்போர்ட், விசா கட்டாயம். விமான நிலையத்தில் பின்பற்றப்படும் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் பின்பற்றப்படும் என்று இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் நிறுவனத்தின் இயக்குநர் செய்யது ஹாசிப் ஜூஹைர் தெரிவித்தார்.

The post நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை மறுதினம் தொடக்கம்: சொகுசு கப்பல் ‘‘செரியபாணி” வந்தடைந்தது appeared first on Dinakaran.

Related Stories: