நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுகவில் தொகுதிப்பங்கீடு பிரசாரத்துக்கு தனித்தனி குழு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்டவைகளுக்கு அதிமுகவில் தனித் தனியே குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாக உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனிக்கூட்டணியை ஏற்படுத்தி போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, பிரசாரம், விளம்பரம் என அனைத்துக்கும் தனித் தனியாக குழு அமைத்து அதற்கான பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார்.

இதுகுறித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நாடாளுமன்ற பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரசாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்படுகின்றன. அதன்படி, அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பா.பென்ஜமின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஏ.ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, பா.வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், வைகைச்செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, பிரசார பணிகளை மேற்கொள்வதற்கான தேர்தல் பிரசாரக் குழுவில் முன்னாள் சபாநாயகர் தனபால் மற்றும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், என்.தளவாய்சுந்தரம், செல்லூர் மு.ராஜூ, ப.தனபால், அன்பழகன், காமராஜ், கோகுல இந்திரா, உடுமலை ராதாகிருஷ்ணன், சு.சிவபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் சம்பந்தமான விளம்பர பணிகளை மேற்கொள்வதற்கான தேர்தல் விளம்பர குழுவில், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ராஜலெட்சுமி மற்றும் நிர்வாகிகள் பி.வேணுகோபால், பரமசிவம், இன்பதுரை, அப்துல் ரஹீம், ராஜ் சத்யன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுகவில் தொகுதிப்பங்கீடு பிரசாரத்துக்கு தனித்தனி குழு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: