நாடாளுமன்ற மக்களவை தேர்தல்; தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயற்சி இன்று தொடக்கம்!

சென்னை: தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயற்சி இன்று தொடங்கியுள்ளது. ஆளும் பாஜக அரசு தொடர்ந்து இருமுறை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. தொடர்ந்து இரு முறை பிரதமர் பதவி வகித்து வரும் மோடி, கடந்த 2019ம் ஆண்டு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு உள்ளன.

இதற்காக சமீபத்தில் பீகாரில் உள்ள பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளை தற்போது தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் இருப்பு எண்ணிக்கை மற்றும் வாக்கு இயந்திரம் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயிற்சி இன்று தொடங்கியுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் ஆகியவை சரி பார்ப்பதற்கான பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. காலை 11 மணிக்கு தொடங்கும் பயிற்சியில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர்.

The post நாடாளுமன்ற மக்களவை தேர்தல்; தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயற்சி இன்று தொடக்கம்! appeared first on Dinakaran.

Related Stories: