பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் மலைக் கோயிலில் அடிப்படை வசதிகள் செய்வதற்கான அரசு அதிகாரிகள் குழு ஆய்வு

பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் பூ மலை சஞ்சீவிராயர் மலைக் கோயிலில் அடிப்படை வசதிகள் செய்வது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே திருவளக்குறிச்சியில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பூ மலை மீது தமிழக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பூமலை சஞ்சீவிராயர் திருக்கோயிலும், அடிவாரத்தில் அருள்மிகு வழித்துணை ஆஞ்சநேயர் திருக்கோயிலும் அமைந்துள்ளன. இந்தக் கோயில்களுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலைவழியாக சுற்றுலா செல்பவர்கள், அய்யப்ப சுவாமி கோயில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் இந்த கோயிலுக்கும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். மேலும், ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் இக்கோயிலில் பூ மலையை சுற்றி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். சுமார் 1850 அடி உயரத்தில் அமைந்துள்ள பூமலை சஞ்சீவிராயர் கோயிலுக்கு செல்ல முழுவதும் படிக்கட்டுகள் இல்லை. இதனால் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். இந்நிலையில், இக்கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அறநிலையத்துறை முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் பிரகாஷ், பெரம்பலூர் உதவி கோட்ட பொறியாளர் அழகுமணி, உதவி கோட்ட பொறியாளர் விஜயகுமார், தொல்லியல் துறை வல்லுநர் சேரன், மண்டல உதவி ஸ்தபதி வெங்கடேசன் உள்ளிட்டோர் நேற்று பூமலை அடிவாரம் மற்றும் மலையின் உச்சி பகுதிவரை சென்று ஆய்வு செய்தனர்.

இக்கோயிலில் மலையின் உச்சிக்கு சென்று வர முழுவதும் படிக்கட்டுகள், மலையில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், அர்ச்சகர்கள் தங்குமிடம், மடப்பள்ளி, பொது சுகாதார வளாகம், மின் விளக்குகள், குடிநீர் வசதி, மலையின் கீழ் பகுதியில் மகா மண்டபம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். மேலும், மலைக்கு வாகனங்கள் சென்றுவர வசதியாக சாலை அமைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது செயல் அலுவலர் ஹேமாவதி, ஆய்வாளர் சுமதி, பணியாளர் ராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் மலைக் கோயிலில் அடிப்படை வசதிகள் செய்வதற்கான அரசு அதிகாரிகள் குழு ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: