மஞ்சூர் : வடகிழக்கு பருவமழையையொட்டி நெடுஞ்சாலை துறை சார்பில் கரும்பாலம்-மஞ்சூர் சாலையில் பாலங்கள் மற்றும் கால்வாய்கள் துார்வாரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கும் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை நீடிக்கும். மாவட்டத்தில் குந்தா, ஊட்டி, கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழையின் தீவிரம் அதிகமாக காணப்படும். குறிப்பாக மஞ்சூர், குந்தா பகுதிகளில் மழையின் போது பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுவது வாடிக்கையாகும்.
இதைத்தொடர்ந்து, அக்டோபர் மாதம் துவங்கும் வடகிழக்கு பருமழையானது குன்னூர், கோத்தகிரி, குந்தா பகுதிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் குறைந்த நிலையில் விரைவில் வடகிழக்கு பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக நெடுஞ்சாலை துறை சார்பில் குன்னுார் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளிலும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமாக உள்ள பாலங்கள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குன்னூர் மஞ்சூர் சாலையில் உள்ள கரும்பாலம் பகுதியில் பாலத்தின் அடியில் தேங்கியுள்ள சேறு, சகதிகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெறுகிறது. இதேபோல் அனைத்து பாலங்களின் அடி பகுதிகளில் மழை வெள்ளம் தேங்காத வகையில் சேறு, சகதிகள் அகற்றப்பட்டு வருகிறது. இதேபோல் மழை நீர் வடிகால்வாய்களும் சீரமைக்கப்படுகிறது. பாலத்தின் இருபுறங்களிலும் வர்ணம் பூசும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
பாலங்கள் தூர்வாருவது மற்றும் கால்வாய் சீரமைப்பு பணிகளை நெடுஞ்சாலை துறை கோட்டப்பொறியாளர் குழந்தைராஜ், உதவி கோட்டப்பொறியாளர் ஜெயபிரகாஷ், குன்னூர் உதவி பொறியாளர் பாலசந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலுவின் அறிவுறுத்தலின் பேரில் குன்னூர் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து சாலைகளிலும் வடகிழக்கு பருவ மழையின்போது சாலைகள் பழுதடையாமல் தடுக்கவும், மண் சரிவு மற்றும் மண் அரிப்புகள் ஏற்படாமல் இருக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலையோரங்களில் வெள்ளம் தேங்குவதை தடுக்க சாலையோர கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் அனைத்து சாலைகளிலும் உள்ள சிறு மற்றும் பெரிய பாலங்களுக்கு அடியில் தேங்கியுள்ள சேறு, சகதிகள் அகற்றப்பட்டு வெள்ளம் சீராக செல்லும் வகையில் துார் வாரப்படுகிறது.
இதனால் பருவ மழையின்போது தண்ணீர் தேங்கி நிற்காமல் எளிதாக வழிந்தோடும். மேலும் பாலங்களின் மேற்புறங்கள் வர்ணங்கள் பூசி பொலிவு படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு கூறியுள்ளனர்.
The post வடகிழக்கு பருவமழை எதிரொலி கரும்பாலம் மஞ்சூர் சாலையில் பாலங்கள் கால்வாய்கள் துார்வாரும் பணி தீவிரம் appeared first on Dinakaran.