வீட்டு மின் நுகர்வோர்களுக்கு, நிலைக்கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்த முழுவிலக்கு தொடர்ந்து அளிக்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களும் பயனடைவார்கள். தற்பொழுது விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிப்பாட்டுதலங்கள் மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலை ஆகிய மின்கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மின்கட்டண சலுகைகள்: இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிக மின நுகர்வோர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.51.40 கோடி அரசிற்கு கூடுதல் செலவாகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 34 லட்சம் சிறு வணிக மின் நுகர்வோர்கள் பயனடைவார்கள். 50 கிலோவாட் வரை ஒப்பந்த பளு கொண்ட தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.76.35 கோடி அரசிற்கு கூடுதல் செலவாகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 2.81 லட்சம் தாழ்வழுத்த தொழிற்சாலை மின்நுகர்வோர்கள் பயனடைவார்கள். குடிசை மற்றும் குறு தொழில்களுக்கு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.9.56 கோடி அரசிற்கு கூடுதல் செலவாகிறது.
இதனால் தமிழ்நாட்டில் உள்ள 2.70 லட்சம் குடிசை மற்றும் குறு தொழில் மின்நுகர்வோர்கள் பயனடைவார்கள். விசைத்தறி நுகர்வோர்களுக்கு 1000 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். மேலும் 1001 யூனிட்டுகளுக்கு மேல் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.7.64 கோடி அரசிற்கு கூடுதல் செலவாகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 1.65 லட்சம் விசைத்தறி நுகர்வோர்களும் பயனடைவார்கள். எனவே 2025-26ம் ஆண்டின் மின்கட்டண உயர்வின்படி, தமிழ்நாட்டில் சுமார் 2.83 கோடி மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லாமல் பயனடைவார்கள். இதனால் தமிழக அரசிற்கு ஆண்டொன்றுக்கு ரூ.519.84 கோடி கூடுதல் செலவாகும். இந்த மானியத் தொகையை தமிழக அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கும். இது தவிர பெரிய தொழில், பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் பிறவகை கட்டண பிரிவுகளுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ளவாறு 3.16 சதவீதத்திற்கு மிகாமல் மின்கட்டணம் உயர்த்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post வீட்டு இணைப்புகள், குடிசை மற்றும் குறுந்தொழில் நுகர்வோருக்கு மின்கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு appeared first on Dinakaran.
