×

சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுபவர்கள் மீது நடவடிக்கை வாடகை வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தல்

பரமக்குடி, மார்ச் 12:  ராமநாதபுரம் மாவட்டத்தில் சொந்த பயன்பாட்டு கார்களை வாடகைக்கு விடுபவர்கள் மீது வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடகை  வாகன ஓட்டுநர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், உத்தரகோசமங்கை, ஏர்வாடி தர்கா உள்ளிட்ட இடங்கள் சுற்றுலா தலமாக உள்ளது. நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் மற்ற பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெளியில் சென்று வருவதற்கு வாடகை வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகளை நம்பி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடகை வாகனங்களை வைத்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் பலர் சொந்த பயன்பாட்டிற்கு வாங்கிய நான்கு சக்கர வாகனங்களை வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருமானம் ஈட்டுகின்றனர். இதனால், வாடகை வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தனியார் கால் டாக்சிகள் பேக்கேஜ் என்ற முறையில் பயணிகளை சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்கின்றன. இதனால், உள்ளூரில் உள்ள வாடகை ஓட்டுநர்கள் போதிய வருவாயின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் வாடகை வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் தனியார் கால் டாக்சிகள் பேக்கேஜ் முறையில் பயணிகளை அழைத்து செல்வதை கட்டுப்படுத்த வேண்டும். சொந்த உபயோக வாகனங்களை வாடகைக்கு விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கலெக்டர், வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்டோரிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் இல்லை. சொந்த பயன்பாட்டிற்கு வாங்கி நான்கு சக்கர வாகனங்களை, வியாபார நோக்கத்தில் பயன்படுத்தவும் ஊழியர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வாடகை வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து பரமக்குடி ராமநாதன் கூறுகையில், ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் சொந்த பயன்பாட்டிற்கு வாங்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்களை பலர் வாடகைக்கு விடுகின்றனர். இதனால் உள்ளூர் வாடகை வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகியுள்ளது. இதனை கட்டுப்படுத்த வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், ராமநாதபுரம் மாவட்டத்தில் சொந்த பயன்பாட்டிற்கு வாங்கப்பட்ட கார் வாடகைக்கு பயன்படுத்தப்பட்டால் வாடகை கார் ஓட்டுனர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியிருக்கும்’’ என எச்சரித்தார்.

Tags : renters ,
× RELATED ஆந்திராவில் வாடகை, கார்...