×

அரசு தடை விதித்துள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்ைக

ராமநாதபுரம், பிப்.12:  சக்கரக்கோட்டை ஊராட்சி, பாரதிநகர் பகுதியில் உள்ள கடைகளில் வீரராகவ ராவ் சென்று, தடை செய்துள்ள ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் ஏதும் பயன்படுத்தப்படுகிறதா என்பது ஆய்வு செய்தார். தமிழக முதலமைச்சர் அரசு மண்வளத்தினை பாதுகாத்து சுற்றுப்புறத் தூய்மையினை மேம்படுத்திடும் நோக்கில் 1.1.2019 முதல் தமிழகத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுப்புற சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், பேக்கரி, சில்லறை மற்றும் மொத்த விற்பனை நிலையங்கள் என அனைத்திலும் ஒருமுறை மட்டும் பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு, தமிழ்நாடு அரசு தடை செய்துள்ள பிளாஸ்டிக் பொருட்களை கடைகளில் இருந்து முற்றிலுமாக பறிமுதல் செய்யப்படுவதோடு சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகின்றது.

நேற்று மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்கள், 7 பேரூராட்சிகள் மற்றும் 4 நகராட்சிகள் என அனைத்துப் பகுதிகளிலும் அந்தந்த உள்ளாட்சி அமைப்பு சார்ந்த அலுவலர்கள் மூலமாக பிளாஸ்டிக் பொருள் பயன்பாடு குறித்த ஆய்வு, பறிமுதல் நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. கலெக்டர் வீரராகவராவ், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், சக்கரக்கோட்டை ஊராட்சி மற்றும் ராமநாதபுரம் நகராட்சி, சேதுபதி நகர் ஆகிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பார்வையிட்டு உரிமையாளர்களின் மீது அபராதம் விதிக்க உத்தரவிட்டார். மேலும் அரசு தடை செய்துள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த ஆய்வின் போது, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கேசவதாசன், நகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், ஸ்டெல்லா உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Action Collector ,government ,
× RELATED மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332...