×

இந்து, கிறிஸ்தவ மக்கள் இணைந்து நடத்தும் கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு ஏற்பாடு ஜரூர் 19ம் தேதி நடக்கிறது

சிவகங்கை, ஜன.14: சிவகங்கை அருகே கண்டுப்பட்டியில் மத நல்லிணக்கத்தை வளர்க்கும் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு விழா ஜன.19ல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் கண்டுப்பட்டியில் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் தை மாதம் ஐந்தாம் தேதி மஞ்சு விரட்டு நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட அனைத்திற்கும் தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் நடந்த போராட்டங்களை தொடர்ந்து அவசர சட்டம் இயற்றப்பட்டு 2017ம் ஆண்டு ஜனவரி இறுதி முதல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜன.19(தை.5)அன்று ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு முதல் நாள் மாலையில் மத வேறுபாடில்லாமல் அனைத்து மக்களும் நேர்த்திக்கடன் வைத்து கண்டுப்பட்டி அந்தோணியார் கோவில் முன் பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறும். ஜல்லிக்கட்டு தினத்தன்று அந்தோணியார் கோவிலில் வழிபாடு முடித்து கோவில் மாடு விடப்பட்ட பின்பே தொழுவத்தில் உள்ள மற்ற மாடுகள் அவிழ்த்து விடப்படும். சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்விழா நடத்தப்பட்டு வருகிறது.

கிறிஸ்தவ கோவிலான அந்தோணியார் கோவிலில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மற்றும் முதல் நாள் பொங்கல் நிகழ்ச்சி என இவைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து மற்றும் கிறிஸ்தவ மக்கள் இணைந்தே செய்து வருகின்றனர். இந்த ஆண்டும் அரசு விதித்துள்ள விதிமுறையின்படி ஜல்லிக்கட்டு நடத்த அதற்கான ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்து வருகின்றனர். இப்பகுதியில் காளைகளை ஜல்லிக்கட்டிற்கு தயார் செய்யும் பணியில் உரிமையாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
கிராமத்தினர் கூறியதாவது: எங்கள் ஊரின் காவல் தெய்வம் அந்தோணியார். கிராமத்தில் குழந்தை பிறந்தால் அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அந்தோணியார் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்துவிட்டுத்தான் மற்ற இடங்களுக்கு செல்வது வழக்கம். அந்தோணியாருக்கு நூற்றாண்டுகளாக இவ்விழா நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டிற்கு ஏற்பாடு நடந்து வருகிறது. ஆண்டுதோறும் இங்கு கட்டு மாடுகளை பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பொட்டலில் அவிழ்த்து விடுவது வழக்கம். தொழுவத்தில் இருந்து நடைபெறும் ஜல்லிக்கட்டை விட பொட்டலில் கூடுதலாக காளைகள் அவிழ்த்துவிடப்படும். இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இவ்வாறு இல்லாமல் அனைத்து காளைகளையும் தொழுவத்திற்கு கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். அதற்கு காளை உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றனர்.


Tags : Christian ,Kandapatti Manchurattu Jarur ,
× RELATED அதானிக்கு எதிராக போராடியதால் கிறிஸ்தவ சபை வங்கி கணக்கு முடக்கம்