×

தனுஷ்கோடியில் பல நாட்களாக கஞ்சா விற்ற போலி சாமியார் கைது

ராமேஸ்வரம், நவ. 29: தனுஷ்கோடியில் பல நாட்களாக கஞ்சா பொட்டலங்களை விறபனை செய்து வந்த போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர். ராமேஸ்வரம் நகராட்சி பகுதியில் ரயில்வே நிலையம், பஸ் நிலையம், அக்னிதீர்த்த கடற்கரை, ஜெ.ஜெ.நகர் கார் நிறுத்தம், வேர்கோடு, தனுஷ்கோடி பகுதியில் கள்ளத்தனமாக கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் உள்ளன. பெரும்பாலும் மீனவர்களை குறிவைத்து விற்கப்படும் கஞ்சா பொட்டலங்களை பள்ளி, கல்லூரி மாணவர்களும், படித்து விட்டு வேலையின்றி இருக்கும் இளைஞர்களும் பணம் கொடுத்து வாங்கி குடித்து கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகின்றனர். ராமேஸ்வரம், பாம்பன் உட்பட தீவுப்பகுதி முழுவதும் கஞ்சா விறபனையும், கள்ளத்தனமாக மதுவிற்பனையும் ஜோராக நடந்து வந்தபோதும் போலீசார் இதனை கண்டு கொள்ளாமல் உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. எப்போதாவது ஒருவர் போலீசாரால் கைது செய்யப்படுவதும் வழக்கமாக இருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், மாவட்டத்தில் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கான வாட்ஸ் அப் தளத்தை உருவாக்கினார். இதில் மாவட்டம் முழுவதிலும் நடைபெறும் சமூகவிரோத குற்றச்செயல்கள் குறித்து பொதுமக்கள் தகவல் பதிவு செய்யவும் தெரிவித்தார். இதனால் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு தகவல்களும் எஸ்.பி. வாட்ஸ் அப் தளத்தில் பதிவு செய்யப்படுவதால் தகவல்களை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட பகுதி போலீசாருக்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்படுகிறது. இதனால் ராமேஸ்வரம் பகுதியில் சில நாட்களாக கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தனுஷ்கோடி பகுதியில் நேற்று கஞ்சா பொட்டலங்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர். தனுஷ்கோடியில் பழைய கப்பல் துறைமுகம் இருந்த பாலம் பகுதியில் நீண்ட தாடியுடன் காவி வேஷ்டி அணிந்து சாமியார் போன்ற தோற்றத்தில் இருந்த நபரை நேற்று தனுஷ்கோடி போலீசார் பிடித்து அவரிடம் இருந்து பேப்பரில் சுற்றிய பொட்டலங்களாக ஒரு கிலோ எடையுள்ள கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் உத்தமபாளையத்தை சேர்ந்த முனியப்ப செட்டியார் மகன் நாகராஜன் (63) என்பதும், நீண்ட நாடகளாக கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து தனுஷ்கோடி போலீசார் நாகராஜனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : preacher ,Dhanushkodi ,
× RELATED மீனவர்கள் எச்சரிக்கையை அலட்சியம்...