×

தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் கருவிகள் வாடகை மையம் அமைக்க 40 சதவீத மானியம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி, அக். 27: தூத்துக்குடி மாவட்டகலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேளாண் பணியாளர்கள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, மாநில அரசு வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சொந்தமாக வாங்கி பயன்படுத்த இயலாததை கருத்தில் கொண்டு, அவற்றை குறைந்த வாடகையில் பெற்று பயனடைய ஏதுவாக வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் ஒரு வாடகை மையம் அமைத்திட 40 சதவிகித மானியம் என்ற அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் 5 வாடகை மையங்கள் அமைக்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, வாடகை மையங்கள் அமைக்க விரும்பும் விவசாயிகள் வேளாண்மைப் பொறியியல் துறையினால் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களின் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை  தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து விண்ணப்பத்தை அருகில் உள்ள உதவி செயற் பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தில் அளிக்க வேண்டும். பின்னர் விவசாயிகள் தமக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் மொத்தத் தொகையை சம்பந்தப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் முகவர்களிடம் வரைவோலையாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பெயரில் செலுத்த வேண்டும். அதன்பின் செயற் பொறியாளர் (வே.பொ) உரிய வழங்கல் ஆணை வழங்கப்பட்டு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்படும்.

மொத்த மானியத் தொகையில் (அதிக பட்சம் ரூ10 லட்சம்) பொதுப் பிரிவினருக்கு ரூ.5 லட்சமும் ஆதி திராவிட பிரிவினருக்கு ரூ.3 லட்சமும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பயனாளியின் “மானிய இருப்பு நிதிக் கணக்கில்” 4 ஆண்டுகளுக்கு இருப்பில் வைக்கப்படும். மீதித் தொகை பயனாளியின் சேமிப்பு வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 4 ஆண்டுகளுக்கு பின் பயனாளிக்கு மானியத்தில் வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சரிபார்த்த பிறகு மானிய இருப்புத்தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் திரும்ப வழங்கப்படும். வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் அமைக்க விரும்புவோர்  தூத்துக்குடி உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (வே.பொ) ஜாகீர் உசேன் செல்போன் எண் 9443694245, கோவில்பட்டி உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (வே.பொ) பழனிசாமியின் செல்போன் எண் 9442049591, திருச்செந்தூர் உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளர் (வே.பொ) சங்கர்ராஜின் செல்போன் எண் 9443157710 ஆகியோரை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Sandeep Nanduri ,Agricultural Tools Rental Center ,Thoothukudi district ,
× RELATED கனிமொழி எம்பி பிறந்த நாளையொட்டி...