×

ஆழ்கடலில் பிடிக்கப்படும் சூரை மீன்களை வாங்க ஜப்பானியர்கள் ஆர்வம் மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் தகவல்

ராமநாதபுரம், ஜூன் 12:  ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் ஆழ்கடல் சூரை மீன்களை வாங்க ஜப்பானிய வியாபாரிகள் ஆர்வம் காட்டுவதாகவும், தூண்டில் மூலம் பிடிக்கப்படும் சூரை மீன்களுக்கு பல மடங்கு விலை கூடுதல் கிடைக்கும் என மீன்வளத் துறை கூடுதல் இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார். அவர் கூறுகையில், நாட்டிலேயே ஜப்பானியர்கள் மீன்களை சாப்பிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் உயிருடன் பிடித்து வரும் மீன்களுக்கு அதிக விலைக் கொடுத்து வாங்கியும் வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் கன்னியாகுமரி மீனவர்கள் ஆழ்கடலில் பிடித்த சூரை மீன்களை ஜப்பானிய மீன் ஏற்றுமதி நிறுவன அதிபர் ஹிமோரா 100 டன் மீன்களை வாங்கி சென்றார்.

அதேபோல ராமநாதபுரம் மீனவர்கள் ஆழ்கடலில் சூரை மீன்களை தூண்டில்கள் மூலம் பிடித்து முறையாக பதப்படுத்தினால் ஜப்பானிய மீன் ஏற்றுமதி நிறுவனத்தாரிடம் அதிக விலைக்கு விற்கலாம். சூறை மீன்கள் தற்போது கிலோ ரூ.55 முதல் ரூ.70 வரை விற்கப்பட்டு வருகிறது. வலை மூலம் பிடிக்கப்படுவதால் செவுள் கிழிந்து பிடித்த உடனேயே உயிரிழந்து விடுகிறது. இதனால் அவை மிகக்குறைந்த விலையிலே விற்கும் நிலை உள்ளது. ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் தூண்டில் முறையில் சூரை மீன்கள் பிடிக்கப்பட்டு உடனுக்குடன் பதப்படுத்தும் வசதி உள்ளது. இதனால் அந்தமீன்கள் கிலோ ரூ.1500 முதல் ரூ.1700 வரை விற்கலாம். ஆழ்கடலில் மீன்பிடி தொழில் செய்து மீனவர்கள் கூடுதல் வருமானம் ஈட்டலாம் என்றார்.

Tags : Director of Fisheries Department ,Japan ,sea ,
× RELATED ஜப்பான், இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!