×

ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி பகுதியில் தொடரும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

ஆர்.எஸ்.மங்கலம், ஜூன் 11:  ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் பெரும்பாலான பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதற்கு உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து சீரான மின்சாரம் வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் ஆனந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு உள்ளது. ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதிகளில் அவ்வப்போது போய் வந்த மின்சாரம் ஞாயிற்றுகிழமை இரவு முதல் முழுவதுமாய் துண்டிக்கப்பட்டு வீடுகளில் உள்ள குழந்தைகள்  முதியோர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள் என அனைவரும் இரவு பகலாக தூங்க முடியாமலும், கடைகள் மற்றும் வணிக நிறுவனத்தினரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் எதார்த்தமாகவே கூடுதல் வெப்பமாக உள்ளது. வீடுகள் ஏசி, மின்விசிறி போன்றவை இல்லாமல் இயற்கையாகவே இப்போதெல்லாம் தூங்க முடியாது. இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர், திருப்பாலைக்குடி,ஆனந்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் பொதுமக்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர்.

ஆனந்தூர் பட்டானி மீரா கூறுகையில், ‘ஆர்.எஸ்.மங்கலம் மின்சார வாரியம் மக்களின் தேவையை புரிந்து கொண்டு சரியான முறையில் பணி செய்வதில்லை. முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில்லை. சம்மந்தப்பட்டவர்களிடம் ஊரில் மின்சாரம் அடிக்கடி கட் ஆகின்றது. அதை சரி செய்து கொடுங்கள். பழுதடைந்த மின்கம்பங்களையும், மின்கம்பிகளையும் மாற்றுங்கள் என எத்தனை முறை கோரிக்கை வைத்தாலும் மின்வாரிய ஊழியர்கள் கண்டுகொள்ளவதில்லை.
அதற்கு மேல் கேட்டால் ஆள் பற்றாக்குறை என்கின்றார்கள். ஒழுங்கான முறையில் ரீடிங் எடுப்பதில்லை. அவ்வாறு குறிப்பிட்ட காலங்களில் மின் கணக்கெடுப்பு நடைபெறாமல் போவதால், பொதுமக்கள் கூடுதல் மின் கட்டணம் செலுத்தும் நிலை உருவாகின்றது. தற்போது அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு நடப்பதால் சிறு குழந்தைகளும் வயதான முதியோர்களும் கூடுதல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆகையால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஆட்கள் பற்றாக்குறையை போக்கி மின் வழித்தடங்களை முறையாக பராமரித்து மக்கள் நிம்மதியாக வாழ தடையின்றி மின்சாரம் வழங்க உதவிட வேண்டும்’என்றார்.

Tags : RS Mangalam ,throat area ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கரும்பு ஜூஸ், இளநீர் விற்பனை ஜோரு