×

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு பள்ளிகளில் அடிப்படை வசதி

பரமக்குடி, மே 30:  பரமக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு, நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் நல பள்ளிகளில், கடந்த 2017-18ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. காட்டுபரமக்குடி, பாமபுவிழந்தான் உள்ளிடட அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டுகளை காட்டிலும், சென்ற ஆண்டு மொத்த மாணவர்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவுக்கு ஆசிரியர்களின் கடும் முயற்சியாலும், ஊர்மக்களின் ஒத்துழைப்புடன் உயர்ந்துள்ளது.

ஆனால், இதற்கு ஏற்றார்போல் சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். போதுமான கழிப்பறை வசதி இல்லாததால் மாணவிகள் பள்ளி இடைவேளையில் அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று வருகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், போதிய கட்டமைப்புகளை உருவாக்கி பள்ளியின் தரத்தை உயர்த்துவதற்கும், விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், விளையாட்டு திடலை மேம்படுத்தி விளையாட்டுக்கு தேவைப்படக் கூடிய உபகரணங்களை வழங்க மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும்.

கடந்த காலங்களில் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கைக்கு சத்துணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருவதால், தற்போது கூடுதலாக படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு உணவு கொடுக்க முடியாமல் சத்துணவு ஊழியர்கள் திண்டாடி வருகின்றனர். அதுபோல் கழிப்பறை இல்லாததால் திறந்த வெழியில் பாதுகாப்பு இல்லாமல் இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர்.

குடிநீர் போதுமான அளவு இல்லாததால் மாணவர்கள் தங்களின் வீடுகளுக்கு சென்று தாகத்தை தீர்த்து வருகின்றனர்.  சிவானந்தபுராம் நகராட்சி தொடக்கப்பள்ளி, கௌரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வரும் கல்வியாண்டிலும் மாணவர்களின் எண்ணிக்கை உரும் என்பதால், மாவட்ட ஆட்சியர், அதிக எண்ணிக்கை உள்ள ஆதிதிராவிடர், நகராட்சி, ஒன்றிய அளவிலான பள்ளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : facility ,government schools ,
× RELATED மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332...