×

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மக்களை கவர்ந்த ரூ.72,000 வாக்குறுதி நீட்தேர்வு, விவசாய கடன் ரத்துக்கும் அமோக ஆதரவு

சிவகங்கை, ஏப்.4: ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம், நீட்தேர்வு, விவசாய கடன் ரத்து போன்ற காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள், சிவகங்கை மாவட்ட மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் ஏப்.18 அன்று மக்களவை தேர்தலும், சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகி, வேட்பாளர் அறிவிப்பு, மனுத்தாக்கல், அனைத்தும் முடிவடைந்து தற்போது வேட்பாளர்கள் கட்சியினர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.சிவகங்கை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திசிதம்பரமும், மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் இலக்கியதாசனும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரையும் ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 29ம் தேதி பிரச்சாரம் செய்தார். சிவகங்கை மாவட்டத்திற்கு திமுக காங்கிரஸ் கூட்டணியில் செய்த சாதனைகள், இனி செய்யப்போகும் நலத்திட்டங்கள் என சுமார் ஒரு மணி நேரம் பேசினார். இந்த பேச்சிற்கு பொதுமக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

இதுபோல் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர்அல்போன்ஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோரின் பேச்சிற்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து திராவிடர் கழக தலைவர் வீரமணி, மதிமுக ெபாதுச்செயலாளர் வைகோ, திருச்சி சிவா எம்பி, முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பிரச்சாரம் நடக்க உள்ளது. இதனிடையே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மக்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கல்வி, விவசாய கடன் ரத்து, ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் நிதிஉதவி, நீட் தேர்வு ரத்து, விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போன்ற அறிவிப்புகள் சிவகங்கை மாவட்ட மக்களவை பெரிதும் கவர்ந்துள்ளன.

ஆனால் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் இல்லை. இதனால் சிவகங்கை மாவட்ட விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள், வர்த்தகர்களின் ஓட்டு பெருமளவில் காங்கிரஸ் வேட்பாளருக்கே விழும் சூழல் நிலவுகிறது. கட்சியினர் கூறுகையில், ‘‘பாஜ.விற்கு சிவகங்கை தொகுதியை ஒதுக்கியதால் அதிமுகவினர் அதிருப்தியில் உள்ளனர். மேலும் அதிமுக நிர்வாகிகள் முழுவதும் மானாமதுரை சட்டமன்ற தொகுதியிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர். இதுவே சிவகங்கை பாஜ வேட்பாளர் எச்.ராஜாவிற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் திமுக கூட்டணி தலைவர்களின் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை போன்றவை பொதுமக்கள் மட்டுமின்றி அதிமுகவினரைக்கூட கவரும் வகையில் உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் அறிவித்த ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் நிதி உதவி, விவசாய கடன், நீட்தேர்வு ரத்து போன்றவை அனைத்து தரப்பு மக்களிடமும் ஆதரவை பெற்றுள்ளது’’ என்றனர்.

Tags : abolition ,Congress ,
× RELATED அதிமுக ஆட்சியில் மாநகராட்சி டெண்டர்...