×

அதிமுக ஆட்சியில் மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக நிறுவனங்களுக்கு எதிரான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் : லஞ்ச ஒழிப்புத்துறை

சென்னை : அதிமுக ஆட்சியில் நடந்த மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் 5 நிறுவனங்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிரான அவமதிப்பு வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் மீதான வழக்கை ஐகோர்ட் ரத்து செய்ததை அடுத்து 5 நிறுவனங்கள் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் 5 நிறுவனங்கள் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்தனர். 5 நிறுவனங்களின் மனுக்களை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அவற்றை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.மேலும் 6 வாரங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.ஆனால் ஐகோர்ட் ஆணைப்படி நிறுவனங்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான லஞ்ச ஒழிப்புத்துறை, அதிமுக ஆட்சியில் மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக நிறுவனங்களுக்கு எதிரான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக விளக்கம் அளித்தது. விளக்கத்தை ஏற்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிராக தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்த நீதிபதி, குற்றப்பத்திரிகையை 2 வாரங்களில் பரிசீலிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

The post அதிமுக ஆட்சியில் மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக நிறுவனங்களுக்கு எதிரான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் : லஞ்ச ஒழிப்புத்துறை appeared first on Dinakaran.

Tags : Department of Bribery Abolition ,Chennai ,Adimuka ,Bribery Department ,Chennai, Goa ,Bribery Abolition Department ,Dinakaran ,
× RELATED போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில்...