×

தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வாரச்சந்தையால் விபத்து அபாயம்

பரமக்குடி, மார்ச் 12: சத்திரக்குடியில் திங்கள் கிழமை நடைபெறும் வாரச்சந்தையால், மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சாலையோரத்தில் விரிக்கப்படும் கடைகளால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. பரமக்குடி அருகே சத்திரக்குடியில் வாரந்தோறும் திங்கள் கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையை சத்திரக்குடியை சுற்றியுள்ள சுமார் 50 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாரச்சந்தை நடைபெறும் இடம் போதுமானதாக இல்லாததால், வியாபாரிகள் மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து சாலையோர கடைகள் அமைத்து வருகின்றனர். சந்தை நடக்கும் போது அதிகமாக பொதுமக்கள் கூடுவதால், தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சாலையோர கடைகளில் பொருள்களை வாங்குவதற்கு மக்கள் நிற்கும்போது விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரின் வசதிக்காக காய்கறி கடை, பழக்கடை, கருவாட்டு கடை, மீன்கடை உள்ளிட்ட கடைகள் அமைக்கப்பட்டாலும், சாலையை ஆக்கிரமித்து கடைகள் உள்ளதால் வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் வாரச்சந்தையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி சாலைகளை ஆக்கிரமிக்கும் வியாபாரிகளுக்கு சந்தை பகுதியிலேயே நிரந்தரமாக கடை அமைக்க ஏற்பாடு செய்தால் மட்டுமே வரும் காலங்களில் விபத்து அபாயத்தை தவிர்க்க முடியும்.

அப்பகுதியை சேர்ந்த ராமபாண்டி கூறுகையில், “சாலையின் இருபக்கமும் கடைகள் போடுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கடைகளின் அருகே குடியிருப்பு வீடுகளும், கடைகளும்  நிரந்தரமாக உள்ளதால், அவர்கள் தரை வாடகைக்கு விட்டு அதன் மூலம் பணம் வசூல் செய்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் தற்போது இல்லாத நிலையில் பராமரிப்பு இல்லாமல் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் வாரச்சந்தைக்கு போதுமான இடவசதிகளை செய்து கொடுக்க முன்வரவேண்டும்’ என்றார்.

விரைவில் இறுதி பட்டியல்
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 31.1.2019 அன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் 1916 வாக்குச்சாவடி மைங்களும் 7லட்சத்து 73 ஆயிரத்து 36 ஆண் வாக்காளர்களும், 7லட்சத்து 79ஆயிரத்து 643 பெண் வாக்காளர்களும், 82 மூன்றாம் பாலினத்து வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஜன.31 முதல் இதுநாள் வரையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், மாற்றம் செய்தல் தொடர்பாக பெறப்பட்ட மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்ற மக்களவை பொது தேர்தல்-2019-க்கான இறுதி வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.

Tags : highway ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!