×

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை 4,690 பேர் எழுதினர்-2,416 பேர் ஆப்சென்ட்: கலெக்டர் ஆய்வு

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை 4,690 பேர் எழுதினர்.ராணிப்பேட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள 54 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நேற்று நடந்தது. அரக்கோணம், நெமிலி, வாலாஜா, சோளிங்கர், ஆற்காடு, கலவை, உள்ளிட்ட 5 இடங்களில் எழுத்துத்தேர்வு நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் தேர்வு எழுதவந்தவர்கள் சோதனை செய்யப்பட்டு தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும், 5ம் வகுப்பு பாடதிட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.

வாலாஜா, அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த கிராம உதவியாளர் எழுத்துத் தேர்வை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்டம் முழுவதும் 4,690 பேர் கிராம உதவியாளர் தேர்வை எழுதினர். 2,416 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 54 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் பங்கேற்க 6,849 பேர் ஆன்லைன் மூலமாகவும், 258 பேர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் மூலமாகவும் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு நேற்று 5 இடங்களில் நடந்தது. இதில், 4,690 பேர் தேர்வில் பங்கேற்றனர். 2,416 பேர் தேர்வு எழுத வரவில்லை, என்றனர்.

இதில், கலெக்டர் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், தாசில்தார்கள் நடராஜன்(வாலாஜா), சுரேஷ்(ஆற்காடு) ஆகியோர் உடனிருந்தனர்.ஆற்காடு : ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிராம உதவியாளருக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. ஆற்காடு தாலுகாவில் விண்ணப்பித்த 1,070 பேரில் 739 பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள். மேற்கண்ட தேர்வு மையத்தை ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நெமிலி : நெமிலி தாலுகாவில் கிராம உதவியாளர்கள் 15 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டி கடந்த மாதம் நெமிலி தாலுகாவில் 1,328 விண்ணப்பங்கள் பதிவு செய்திருந்தனர். அதன் பேரில் நேற்று நெமிலி தாலுக்காவில் 2 இடங்களில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சயனபுரம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் நெமிலி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்ற கிராம உதவியாளர்கள் தேர்வு மையங்களில் 1,328 நபர்கள் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அதில், 872 நபர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள். அப்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி மற்றும் தாசில்தார் சுமதி நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும், தேர்வுக்கு பதிவு செய்து 456 நபர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.கலவை : கலவை தாலுக்கா அலுவலகத்தில் காலியாக உள்ள 7 கிராம உதவியாளர் பணிக்கு கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி முதல் கடந்த 7ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

இதில் மொத்தம் 7 பணியிடங்களுக்கு  673 பேர் விண்ணப்பித்திருந்தனர். அனைவருக்கும் தேர்வு எழுத  குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை கலவை அடுத்த முள்ளுவாடி கிராமத்தில் உள்ள  தனியார் கல்லூரியில் எழுத்து தேர்வு தாசில்தார் மதிவாணன் தலைமையில் நடைபெற்றது. இதில், 673 பேர் விண்ணப்பித்திருந்தனர்.  தேர்வு எழுத 425 பேர் கலந்து கொண்டனர், 248 தேர்வு எழுத வரவில்லை.

Tags : Ranipetta district , Ranipet: Written Test for Village Assistant Vacancies held in Ranipet district
× RELATED கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்...