×
Saravana Stores

சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோலுடன் வந்த பெண்கள்

சேலம், ஏப். 4: சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்தவர் பூபதி. வெள்ளிப் பட்டறை தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி எழிலரசி. பூபதி ஏற்கனவே திருமணம் செய்து முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில் இரண்டாவதாக எழிலரசியை திருமணம் செய்து கொண்டார். கடந்த 29ம் தேதி பூபதி, எழிலரசி டூவீலரில் சென்றபோது நெய்காரப்பட்டியில் 4 பேர் வழிமறித்து தாக்கி வண்டியை பறித்து சென்றனர். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. படுகாயமடைந்த பூபதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் எழிலரசி தனது தங்கையுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, அவரது பையை போலீசார் பரிசோதனை செய்தபோது, பெட்ரோல் பாட்டில் இருந்தது தெரிந்தது. இதுபற்றி அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், எனது கணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வண்டியை மீட்டு தர வேண்டும். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். தொடர்ந்து அவரிடம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோல் சேலம் வீரபாண்டி பகுதியை சேர்ந்த பழனியப்பன் மனைவி சரஸ்வதி தனது இரண்டு குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவரது பையை போலீசார் பரிசோதித்தபோது பெட்ரோல் கேன் இருப்பது தெரிந்தது. அவரிடம் விசாரித்தபோது, எங்களுக்கு சொந்தமான நிலத்தை சுற்றி உறவினர்கள் வேலி போட்டுள்ளனர். அதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குழந்தைகளுடன் தீக்குளிப்பதற்காக பெட்ரோலுடன் வந்ததாக தெரிவித்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோலுடன் வந்த பெண்கள் appeared first on Dinakaran.

Tags : Salem Collector ,Salem ,Bhupathi ,Sivathapuram ,Dinakaran ,
× RELATED கலெக்டர் ஆபிஸ் முன் பெண் திடீர் தர்ணா