×

பந்தலூர் அருகே கொரோனாவால் இறந்தவர் உடலை வனப்பகுதியில் அடக்கம் செய்ததால் சர்ச்சை

பந்தலூ: பந்தலூர் அருகே அய்யன்கொல்லி பகுதியில் கொரோனா தொற்றில் இறந்தவர் உடலை வனப்பகுதியில் அடக்கம் செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அய்யன்கொல்லி பகுதியை சேர்ந்தவர் 28 வயது பனியன் கம்பெனி ஊழியர். இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன் 28 வயது வாலிபர் அய்யன்கொல்லி பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், அவர் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையறிந்த உறவினர்கள் அவரை மீட்டு கேரளா மாநிலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வாலிபர் உயிரிழந்தார்.

இந்நிலையில் மருத்துவமனையில், வாலிபருக்கு பரிசோதனை செய்தபேது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால், அய்யன்கொல்லி பஜார் முழுதும் சேரங்கோடு ஊராட்சி சார்பில், கிருமி நாசினி தெளித்து, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வியாபாரிகள் கடைகளை அடைக்க முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் அய்யன்கொல்லி பகுதியில் வாலிபர் வசித்த பகுதியில் அவருக்கு சொந்தமான இடத்தில் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் திடீரென போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அய்யன்கொல்லி வனவர் குடியிருப்பு அருகே உள்ள மயானத்தில் அடக்கம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தனர்.

அதற்கு வனத்துறையினர் தங்களுக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் வனத்துறையின் எதிர்ப்பை மீறி கொரோனா பாதித்த வாலிபர் உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது: இப்பகுதியில் ஏற்கனவே இறந்தவர்களை அடக்கம் செய்து வந்துள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு முதல் இப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாறியது. எனவே இப்பகுதியில் இறந்தவர்களை புதைப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அதனால் இப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மயானத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மனு அளித்திருந்தனர்.

இதையடுத்து கடந்த 26.10.2018 அன்று நீலகிரி கலெக்டர் பந்தலூர் தாசில்தாருக்கு விசாரனை நடத்தி அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டார். ஆனால், வருவாய்த்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். இந்நிலையில் வனத்துறை எதிர்ப்பையும் மீறி நேற்று முன்தினம் இறந்தவர் உடலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அடக்கம் செய்துள்ளனர். அப்பகுதி நீர்பிடிப்பு பகுதி என்பதால், நீரோடை மற்றும் தடுப்பணைகள் உள்ளது. இதன் காரணமாக இறந்தவர்களை அடக்கம் செய்வதால், பாதிப்புகள் ஏற்படும். இவ்வாறு வனத்துறையினர் தெரிவித்தனர். இது பற்றி பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த மயானத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : corona ,Pandharpur , Controversy erupts over burial of corpse by corona near Pandharpur
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...