×

பேச்சிப்பாறை அருகே இறந்து கிடந்தது முள்ளம்பன்றியின் முட்கள் குத்தியதால் ஒரு வாரம் உண்ணமுடியாமல் தவித்த புலி

*உடற்கூறு ஆய்வில் தகவல்

நாகர்கோவில் : பேச்சிப்பாறை பகுதியை அடுத்த மலைகிராமமான ஆண்டிபொத்தை பகுதியை சேர்ந்தவர் ஜெகன்(28). அன்னாசி விவசாயம் செய்து வருகிறார். குலசேகரம் அருகே சேக்கல் பகுதியில் உள்ள தனது அன்னாசி தோட்டத்துக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் காலை பைக்கில் சென்றார். அப்போது மலையில் இருந்து வந்த புலி ஜெகன் ஓட்டிச்சென்ற பைக் முன் பாய்ந்து சென்றது.

இதில் தடுமாறி கீழே விழுந்த ஜெகன் படுகாயம் அடைந்தார். பின்னர் அந்த புலி தனியார் ரப்பர் தோட்டத்துக்குள் புகுந்தது. அந்த தோட்டத்தில் பால் வெட்டும் பணியில் இருந்த திருநந்திக்கரை திட்டவிளை பகுதியை சேர்ந்த பூதலிங்கம்(61) என்பவரை புலி கடித்து குதறியது. அவரது அலறல் சத்தம் கேட்டு மற்ற தோட்டத்தில் பணியில் இருந்தவர்கள் அங்கு வந்தனர். அதற்குள் அந்த புலி அங்கிருந்து தப்பிச் சென்றது. ஆனால் புலி சிறிது தூரத்தில் ஒரு பள்ளத்தில் இறந்து கிடந்தது.

சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். இதில் இறந்து கிடந்தது பெண் புலி என தெரியவந்தது. மேலும் புலியின் முகம், வாய் பகுதிகளில் முள்ளம்பன்றியின் முட்கள் இருந்தன. முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள் மற்றும் டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த புலியின் உடற்கூறு ஆய்வு செய்தனர். ஆய்வில் முள்ளம்பன்றி தாக்கியதில் புலி இறந்து இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து புலியின் உடல் வனத்தில் எரியூட்டப்பட்டது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: புலிகள் தனிமையில் வாழக்கூடியவை. கூட்டமாக வாழ்வது இல்லை. இனச்சேர்க்கையின் போது மட்டுமே ஆண், பெண் புலி ஒன்றாக இருக்கும். அதன்பிறகு அந்த புலிகள் பிரிந்து விடும். புலி தனது வாழ்வாதாரத்தை ஒரு எல்லை நிர்ணயம் செய்து வாழும். அதற்குள் மற்ற புலிகளை உள்ளே விடுவது இல்லை. அந்த வகையில் இறந்த புலியை வேறு ஒரு புலி விரட்டி இருக்கும். விரட்டப்பட்ட புலி தனது எல்லையையும், உணவையும் தேடி அலைந்த போது தான், முள்ளம் பன்றியை வேட்டையாடி இருக்கும்.

அப்போது முள்ளம் பன்றியின் கூர்மையான மூட்கள் புலியின் முகம், வாய் பகுதியை தாக்கியுள்ளது. இதனால் முகம் உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் இருந்துள்ளது. முள்ளம் பன்றியின் மூட்கள் குத்தியதால் கடந்த ஒரு வாரகாலமாக அந்த புலி எந்த வித உணவையும் உட்கொள்ள முடியாமல் தவித்து வந்துள்ளது. இதனால் உடல்சோர்வாக இருந்துள்ளது. உணவு உண்பதற்கு வாய்திறக்க முடியாத நிலையில், பல கிலோ மீட்டர் தூரம் புலி கடந்து வந்ததால் இறந்துள்ளது என்றனர்.

The post பேச்சிப்பாறை அருகே இறந்து கிடந்தது முள்ளம்பன்றியின் முட்கள் குத்தியதால் ஒரு வாரம் உண்ணமுடியாமல் தவித்த புலி appeared first on Dinakaran.

Tags : Pachiparai ,Nagercoil ,Antipothi ,Sekal ,Kulasekaram ,
× RELATED முள்ளம்பன்றி தாக்கியதால் மரணம்;...