×

45,000 தொட்டிகள் கொண்டு மலர் கண்காட்சி அலங்கார பணிகள் துவங்கியது

ஊட்டி : ஆண்டு தோறும் கோடை காலத்தின் போது, குளு குளு சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி வருவது வழக்கம். அவ்வாறு வரும் பயணிகளை மகிழ்விப்பதற்காகவும், சுற்றுலாவை மேம்பாடுத்துவதற்காகவும் மே மாதத்தில் பல்வேறு விழாக்கள் சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் நடத்தப்படுகிறது.

இதில், முக்கிய விழாவாக அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சியை காண வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு தோறும் மே மாதம் 2வது அல்லது 3வது வாரத்தில் இந்த மலர் கண்காட்சி நடத்தப்படும். இம்முறை நாடாளுமன்ற தேர்தல் முன்னதாகவே முடிந்த நிலையில் வரும் மே மாதம் 17ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை 6 நாட்கள் ஊட்டியில் மலர் கண்காட்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், காய்கறி மற்றும் ரோஜா கண்காட்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் முன்னதாகவே மலர் கண்காட்சியை நடத்த தோட்டக்கலைத்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், மே மாதம் முதல் வாரத்தில் துவங்கி தொடர்ந்து 10 நாட்கள் மலர் கண்காட்சியை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. இதனால், இம்முறை முன்னதாகவே மாடங்களில் மலர் தொட்டிகளை அடுக்கும் பணிகள் துவக்கப்பட்டள்ளது. மலர் கண்காட்சியின் போது, ஆண்டு தோறும் பூங்காவில் 35 ஆயிரம் மலர் தொட்டிகள் தயார் செய்யப்பட்டு மலர் அலங்காரங்கள் செய்யப்படும். இம்முறை 45 ஆயிரம் தொட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

தொட்டிகளில் தற்போது டேலியா, மேரிகோல்டு, பேன்சி, பிட்டடோனியா, சால்வியா, பேன்சி, லில்லியம், பெகுனியா உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பல்வேறு வகையான மலர்கள் பூத்துள்ளன. இந்நிலையில், அலங்கார மேடையில் பூந்தொட்டிகள் அடுக்கும் பணிகள் துவங்கின. தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிபிலா மேரி, தாவரவியல் பூங்கா உதவி இயக்குநர் பாலசங்கர் முன்னிலையில், ஊழியர்கள் தொட்டிகளை மாடங்களில் அடுக்கும் பணிகளை மேற்கொண்டனர். மேலும், பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானத்தில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்காமல் பசுமையாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post 45,000 தொட்டிகள் கொண்டு மலர் கண்காட்சி அலங்கார பணிகள் துவங்கியது appeared first on Dinakaran.

Tags : Ooty ,Department of Tourism and Horticulture ,
× RELATED படகு இல்லம் செல்லும் சாலையோர தடுப்பில் வர்ணம் பூசும் பணி தீவிரம்