×

கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு வழங்கியதற்கான தொகை கொடுக்காததால் கலெக்டர் கார் ஜப்தி: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு வழங்கிய மெஸ்சிற்கு அதற்கான தொகையை வழங்காததால் நீதிமன்ற அமீனாக்கள், கலெக்டர் காரை ஜப்தி செய்ய வந்தனர். இச்சம்பவம் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவர் ஆந்திரா மெஸ் நடத்தி வருகிறார்.

இவர் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பேரிடர் பெருந்தொற்று ஏற்பட்டபோது குன்றத்தூர் ஒன்றியம் ஏழிச்சூர், வாலாஜாபாத் ஒன்றியம் மீனாட்சி மெடிக்கல் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டிருந்த கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு உணவு வழங்க உத்தரவு வழங்கப்பட்டது. இதையடுத்து, அரிகிருஷ்ணன் மெஸ்சில் இருந்து நோயாளிகளுக்கு உணவு சப்ளை செய்து வந்தார். இந்நிலையில், உணவு வழங்கப்பட்டதற்கான தொகை 3 ஆண்டுகளான நிலையில் அரிகிருஷ்ணனனுக்கு வழங்கப்படவில்லை.

இதுதொடர்பாக பலமுறை முறையிட்டும் பேரிடர் மேலாண்மை துறை நடவடிக்கை எடுக்காமல் மறுப்பு தெரிவித்து வந்தது. இதையடுத்து அரிகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் (சிவில் சூட்) இழப்பீடு வழக்காக பதிவு செய்ய அரிகிருஷ்ணனுக்கு அறிவுறுத்தியது. அதன்பேரில் அவர் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி செம்மல் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

இருப்பினும், பேரிடர் மேலாண்மை துறை இழப்பீடு வழங்காமல் காலதாமதம் செய்து வந்தது. இதை அடுத்து மீண்டும் அரிகிருஷ்ணன் நிறைவேற்ற மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி செம்மல், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் இல்லை என்றால் கலெக்டரின் கார், நாற்காலி மற்றும் டேபிள்கள் ஆகியவற்றை ஐப்தி செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து, நீதிமன்ற அமீனாக்கள் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது கலெக்டர் இல்லாத நிலையில், விரைவில் இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, அமீனாக்கள் ஜப்தி நடவடிக்கைளை கைவிட்டுவிட்டு திரும்பி சென்றனர். இதனால் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு வழங்கியதற்கான தொகை கொடுக்காததால் கலெக்டர் கார் ஜப்தி: காஞ்சிபுரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Corona: Confusion ,Kanchipuram ,Kanchipuram district ,Corona ,Kanchipuram Collector ,Kanchipuram Mettu Street ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை...