×

வீட்டை விட்டு யாரும் வெளியே வருகிறார்களா? சீல் வைக்கப்பட்ட இடங்களில் ‘ட்ரோன்’ மூலம் கண்காணிப்பு: சேலம் போலீசார் அதிரடி நடவடிக்கை

சேலம்:  சேலத்தில் சீல் வைக்கப்பட்ட இடங்களில் வீட்டை விட்டு யாரும் வெளியே வருகிறார்களா? என்பதை ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் டெல்லி நிகழ்ச்சிக்கு சென்று வந்தவர்கள் மற்றும் கொரோனா நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் வசித்த இடங்களை கண்டறிந்து, அங்குள்ள தெருக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது. இந்த வகையில் மாவட்ட பகுதியில் மேட்டூரில் சேலம் கேம்ப், மின்நகர், கருமலைக்கூடல் ஆகிய இடங்களிலும், தாரமங்கலத்தில் பஜார்தெரு, கோயில் பகுதி உள்ளிட்ட இடங்களில் உள்ள தெருக்களின் நுழைவுவாயில்களில் தடுப்புகள் அமைத்து சீல் வைத்துள்ளனர். இந்த இடங்களில் வசிக்கும் மக்கள், வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான மளிகை, காய்கறிகளை வீட்டுக்கே சென்று வழங்கி வருகின்றனர். சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் யாராவது வௌியே வருகிறார்களா? என்பதை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவ்வாறு தடையை மீறி வரும் நபர்கள் மீது வழக்கு நடவடிக்கையை போலீசார் எடுக்கின்றனர்.

இந்நிலையில், சீல் வைக்கப்பட்ட இடங்களை வெளியே இருந்தபடி ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணி நேற்று தொடங்கியது. தாரமங்கலத்தில் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார், இப்பணியை மேற்கொண்டனர். அவர்கள், தாரமங்கலம் பஜார்தெரு, கைலாசநாதர் கோயில் பகுதி உள்பட சீல் வைக்கப்பட்ட அனைத்து தெருக்களின் மேல் பகுதியில் ட்ரோனை பறக்கவிட்டு, யாராவது வீட்டில் இருந்து வெளியே வந்து சுற்றுகிறார்களா? என கண்காணித்தனர். இதேபோல், மேட்டூரில் டிஎஸ்பி சவுந்தரராஜன் தலைமையிலான போலீசார், ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். அங்கும், சேலம் கேம்ப், மின்நகர் பகுதிகளில் ட்ரோனை பறக்கவிட்டு, 144 தடை உத்தரவை யாராவது மீறி வெளியே வருகிறார்களா? என கண்காணித்தனர். இப்பணியை ஊரடங்கு முடியும் வரை தொடர்ந்து மேற்கொள்ள இருப்பதாகவும், ட்ரோன் கேமராவில் சிக்கும் நபர்கள் மீது வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுபோக சேலம் மாவட்டத்தில் நேற்றைய தினம், 144 தடையை மீறியதாக 220 வழக்குகள் பதியப்பட்டு, 472 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 162 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags : anyone ,house ,Salem ,police action ,locations ,areas , house, Monitoring ,drone, telephone,action
× RELATED வீட்டை உடைத்து கொள்ளை